இந்திய வீரர்கள் பயிற்சி: உலக டெஸ்ட் பைனலுக்கு ‘ரெடி’ | ஜூன் 10, 2021

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்கள் பயிற்சி: உலக டெஸ்ட் பைனலுக்கு ‘ரெடி’ | ஜூன் 10, 2021

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் பைனலுக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் பைனல் (ஜூன் 18–22), இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4 – செப். 14) பங்கேற்கிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள், சவுத்தாம்ப்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது ‘ரூமில்’ இருந்தபடி உடற்பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது. மூன்று நாட்களுக்கு பின், ‘ஜிம்’, சில குறிப்பிட்ட பகுதிகளில் பயிற்சி மேற்கொள்ள இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்றுடன் ஐந்து நாட்கள் நிறைவடைந்ததால், இந்திய வீரர்கள் முதன்முறையாக மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன்னிலையில் கேப்டன் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, புஜாரா, ரிஷாப் பன்ட் ‘பேட்டிங்’ வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, முன்னணி பவுலர்களான இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அஷ்வின் ‘பவுலிங்’ செய்தனர். பின், ‘பீல்டிங்’ பயிற்சியாளர் ஸ்ரீதர் முன்னிலையில், வீரர்களுக்கு ‘சிலிப்’ பகுதியில் ‘கேட்ச்’ செய்யும் பயிற்சி வழங்கப்பட்டது.

வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட ‘வீடியோவை’ இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனது ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளது. இதில், ‘‘உலக டெஸ்ட் பைனலுக்கு இந்திய அணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. முதன்முறையாக மைதானத்தில் பயிற்சியை துவக்கினோம். வீரர்களிடம் தீவிரம் அதிகமாக இருந்தது,’’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை