பர்ன்ஸ், லாரன்ஸ் அரைசதம்: மீண்டது இங்கிலாந்து | ஜூன் 10, 2021

தினமலர்  தினமலர்
பர்ன்ஸ், லாரன்ஸ் அரைசதம்: மீண்டது இங்கிலாந்து | ஜூன் 10, 2021

பர்மிங்காம்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரோரி பர்ன்ஸ், டான் லாரன்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. பர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் நடக்கிறது. நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங், முதுகுப்பகுதி காயத்தால் விலகினார். இவருக்கு பதிலாக டாம் பிளன்டெல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது மாட் ஹென்றி பந்தில் சிப்லே (35) அவுட்டானார். அடுத்து வந்த ஜாக் கிராலே (0), வாக்னர் ‘வேகத்தில்’ வெளியேறினார். தொடர்ந்து அசத்திய ஹென்றி பந்தில் கேப்டன் ஜோ ரூட் (4) ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ரோரி பர்ன்ஸ், அரைசதம் கடந்தார். இவருக்கு, போப் ஓரளவு ஒத்துழைப்பு தந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த போது போப் (19) ‘பெவிலியன்’ திரும்பினார். பவுல்ட் ‘வேகத்தில்’ பர்ன்ஸ் (81), ஜேம்ஸ் பிராசி (0) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய டான் லாரன்ஸ் தன்பங்கிற்கு அரைசதமடித்தார். ஸ்டோன் (20) ஆறுதல் தந்தார்.

முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்திருந்தது. லாரன்ஸ் (67), மார்க் உட் (16) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஹென்றி, பவுல்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்கும் 162வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் அதிக டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் அலெஸ்டர் குக்கை (161 டெஸ்ட்) முந்தி முதலிடம் பிடித்தார்.

மூலக்கதை