உயிரிழப்புகளை தடுக்க தடுப்பூசி அவசியம்

தினமலர்  தினமலர்
உயிரிழப்புகளை தடுக்க தடுப்பூசி அவசியம்

காஞ்சிபுரம்-'கொரோனா தடுப்பூசி செலுத்திய பின், தொற்று ஏற்பட்டு, விரைந்து குணமடைந்தோம்.

தடுப்பூசி, உயிரிழப்புகளை நிச்சயம் குறைக்கும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் பணியை, மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி போட, பொதுமக்களுக்கு இப்போது வரை தயக்கம் உள்ளது.

தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று வரும் என்பதால், தடுப்பூசியை ஏன் போட வேண்டும் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். அதற்கு பதலளிக்கும் வகையில், 'தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்பட்டால், மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும். உயிரிழப்புகளை தடுக்க முடியும்' என, சுகாதாரத் துறையினர் தொடர்ந்து விளக்கமளித்து வருகின்றனர்.

இது குறித்து, காஞ்சிபுரம் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் கே.பி.இளங்கோவன் கூறியதாவது:தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்ட முதல் நாளான ஜனவரி, 16ல், முதல் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். இரண்டாவது முறையாக, பிப்., 26ல் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்.பின், வழக்கம்போல் என் பணியை மேற்கொண்ட நிலையில், ஏப்ரல், 19ம் தேதி, உடல் வலி, இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, 'சிடி., ஸ்கேன்' எடுத்து பார்த்ததில், நுரையீரல் பாதிப்பு எதுவும் இல்லை. மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து எடுத்ததால், நான்கு நாட்களில் குணமடைந்தேன்.

தொடர்ந்து, 14 நாட்கள் கழித்து, வழக்கம்போல் பணிக்கு திரும்பிவிட்டேன். மூச்சுவிடுவதில் சிரமமோ அல்லது நுரையீரல் பாதிப்போ போன்ற பிரச்னைகள் எனக்கு இல்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், பெரிய அளவிலான பிரச்னைகள் எழவில்லை. பொதுமக்களும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதேபோல், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட, சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி கூறியதாவது:இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

லேசான இருமல் இருந்தபோதே, கொரோனா பரிசோதனை மற்றும் சி.டி., ஸ்கேன் போன்றவை எடுத்து பார்த்ததில், லேசான பாதிப்பு இருந்தது தெரிந்தது. ஒரு வாரம் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன்.லேசான அறிகுறி தென்பட்ட உடனே, பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக்கொண்டேன். விரைந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதால், ஒரு வாரத்திலேயே குணமடைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், பெரிய அளவிலான பாதிப்புகள் எனக்கு ஏற்படவில்லை.

தற்போது, பணிக்கு திரும்பிவிட்டேன். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், உயிரிழப்புகளை நிச்சயம் குறைக்கலாம். பொதுமக்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை