கொரோனா நிவாரணம் தர ரூ.2,098 கோடி விடுவிப்பு

தினமலர்  தினமலர்
கொரோனா நிவாரணம் தர ரூ.2,098 கோடி விடுவிப்பு

சென்னை : அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனாநிவாரண தொகையின் இரண்டாவது தவணையான தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு, 4,196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதில், முதல் கட்டமாக, 2,098 கோடிரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பரவல் கால நிவாரணமாக, தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. அதில், முதல் தவணையான தலா, 2,000 ரூபாய் மே மாதம் வழங்கப்பட்டது.இரண்டாவது தவணையான, தலா, 2,000 ரூபாய், 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு, 4,196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.இந்த நிதி, நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக விடுவிக்கப்படுகிறது.

அதன்படி, இரண்டாவது தவணைக்காக ஒதுக்கிய நிதியில், முதல் கட்டமாக, 2,098 கோடி ரூபாய், நேற்று விடுவிக்கப்பட்டது.இதில், கூட்டுறவு ரேஷன் கடைகளில் உள்ள, 1.96 கோடி கார்டுதாரர்களுக்கான தொகையில், முதற்கட்டமாக, 1,959 கோடி ரூபாய், வாணிப கழகம் சார்பில், தலைமை கூட்டுறவு வங்கி கணக்கில், நேற்று மாலை செலுத்தப்பட்டுள்ளது.


அந்த தொகையை, தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட வாரியாக உள்ள ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்குகளில், மின்னணு பரிவர்த்தனை வாயிலாக, இன்று காலை செலுத்த உள்ளது. அந்த வங்கிகளில் இருந்து, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் எடுத்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய தயாராகும். இரண்டாம் தவணைக்கான இரண்டாவது கட்ட நிதி, அடுத்த சில தினங்களில் விடுவிக்கப்படும் என, தெரிகிறது.

மூலக்கதை