இது உங்கள் இடம்: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எதற்கு?

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எதற்கு?

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


கே.என்.ரமணி, துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின், பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு, 'நீட்' தேர்வு பற்றிய விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது. மருத்துவ பட்டதாரிகள் அனைவருமே, மிக்க திறமை வாய்ந்தவர்களாக இருப்பதே சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.

ஆனால், தகுதியில்லாத பலரும் பணம் கொடுத்து, தனியார் கல்லுாரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து, டாக்டர் பட்டம் பெற்று, மக்கள் உயிருடன் விளையாடும் நிலையை மாற்றவே, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது எனில், மற்ற மாநிலங்களில் ஏன் எதிர்ப்பு கிளம்பவில்லை?

ராணுவத்தில் பணிபுரிய, பிளஸ் 2 முடித்த பின், 'நேஷனல் டிபன்ஸ் அகாடமி'யில் கடினமான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதை ரத்து செய்ய, எந்த அரசியல் கட்சியும் கேட்காது. ஏனெனில், இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இது போலவே மக்களின் உயிரை காப்பாற்றும் டாக்டர் பொறுப்பும். அதனால் தான், நுழைவுத் தேர்வு அவசியமாகிறது.

தமிழக அரசு துறைகளில், சாதாரண எழுத்தர் பணிக்கு கூட, டி.என்.பி.எஸ்.சி., நுழைவுத் தேர்வு நடத்தி, தரவரிசைப்படி தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதை ஏன் நடத்த வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யலாமே. இதை, தமிழக அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை? நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல்வாதிகளே... உங்களை பொறுத்தவரையில், எழுத்தர் பணியை விட, மக்கள் உயிரை காப்பாற்றும் மருத்துவம் மிக எளிதான பணியோ?

மூலக்கதை