ஷிகர் தவான் கேப்டன்: இந்திய அணி அறிவிப்பு | ஜூன் 11, 2021

தினமலர்  தினமலர்
ஷிகர் தவான் கேப்டன்: இந்திய அணி அறிவிப்பு | ஜூன் 11, 2021

புதுடில்லி: இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் துவக்க வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, கவுதம், சேட்டன் சக்காரியா ஆகியோர் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளனர். இதேபோல தமிழக ‘சுழல்’ வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் (தோள்பட்டை), தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜன் (முழங்கால்) ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

தவிர, வலைப்பயிற்சி பவுலர்களாக இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிம்ரன்ஜீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யுவேந்திர சகால், ராகுல் சகார், கவுதம், குர்னால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சகார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா.

மூலக்கதை