கர்நாடகாவில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்!: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு..!!

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்!: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு..!!

பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரு மாநகரம் உட்பட தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சாலையோர வியாபாரிகளுக்கு 6  மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் 30 சதவீத பணியாளர்களும், மற்ற அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றலாம். சிமெண்ட், ஸ்டீல் உற்பத்தி மற்றும் விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி மேற்கொள்ள காலை 5 மணி முதல் 10 மணி வரை பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவில் பொது போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் நிலையில் ஆட்டோ, டாக்சிகள் 2 பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் முழு ஊரடங்கும், நாள்தோறும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை தளர்வற்ற ஊரடங்கும் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுக்குள் வராத பெங்களூரு புறநகர் குடகு, தக்ஷண கனடா, மாண்டியா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை