இனவெறி தாக்குதல், மனித உரிமை மீறல் அதிகரிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

தினமலர்  தினமலர்
இனவெறி தாக்குதல், மனித உரிமை மீறல் அதிகரிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

லண்டன்: கோவிட் பெருந்தொற்று சூழலில் இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான வன்முறை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்து உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்து உள்ளது.


ஐரோப்பிய யூனியன் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:கோவிட் பெருந் தொற்று காலம் சமநிலையற்ற போக்கை அனைத்துத் துறைகளிலும் உருவாக்கி உள்ளது. சமூகத்தில் பலவீனமானவர்கள் மேலும் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஊரடங்கால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர்.

மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை பல மடங்கு அதிகரித்து உள்ளன. இதற்கு எதிராக அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டிய அவசர நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் பெருந்தொற்றால் பல நாடுகளில் வறுமையும், வன்முறையும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, உள்நாட்டில் போர் நிலவும் ஏமன், ஆப்கானிஸ்தான், காங்கோ போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளும் அதிகரித்து வருவதை சில மாதங்களுக்கு ஐ.நா., குறிப்பிட்டுக் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை