பாஜ.வுக்கு தாவும் தலைவர்களால் கவலை காங்கிரசில் மிகப் பெரியளவில் மாற்றத்தை செய்ய வேண்டும்: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
பாஜ.வுக்கு தாவும் தலைவர்களால் கவலை காங்கிரசில் மிகப் பெரியளவில் மாற்றத்தை செய்ய வேண்டும்: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி வேண்டுகோள்

புதுடெல்லி: ``காங்கிரஸ் கட்சி மரபுகளை மட்டுமே நம்பி இருக்காமல், மிக பெரிய மாற்றத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்,’’ என்று காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கட்சியை சீரமைக்க கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜிதின் பிரசாத்தும் ஒருவர். இவர் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தார். ஏற்கனவே, பல தலைவர்கள் பாஜ.வில் சேர்ந்துள்ளனர். இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி நேற்று அளித்த பேட்டி வருமாறு:அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அடுத்து வரும் மக்களவை தேர்தலை சந்திப்பதில் காங்கிரசுக்கு கடும் சிக்கல் ஏற்படும். பிரதமர் மோடி வெல்ல முடியாதவர் அல்ல. கட்சியை சரியான பாதையில் வழி நடத்தினால் அவரை தோற்கடிக்க முடியும். இதற்கு மரபுகளை மட்டுமே நம்பி இருக்காமல், கடும் போட்டி நிலவும் இந்த காலக் கட்டத்தில் கட்சியை மிக பெரிய மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டும். இதனை, மேலும் தள்ளி போடக் கூடாது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கட்சியில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டர்களை ஊக்குவித்தல், முடிவெடுத்தல், திறமை ஒருங்கிணைய பெற்றவர் சோனியா. கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களின் துடிப்பு, அணுகுமுறை, அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சித்து துணை முதல்வர்? பஞ்சாபில் ஏற்பட்ட காங்கிரஸ் உட்கட்சி பூசலை சரி செய்ய, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான மூவர் குழு, ஒரு அறிக்கையை நேற்று சோனியா காந்தியிடம் சமர்பித்தது. அதில், அனைத்து தரப்பினர், சாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் பதவி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துக்கு பொருத்தமான பதவி வழங்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனால், சித்துவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.அடுத்தது யார்?ஜிதின் பிரசாத் கட்சி தாவிய நிலையில், காங்கிரசில் இருந்து அடுத்து விலக போவது யார் என்ற பரபரப்பு நிலவுகிறது. ஏற்கனவே கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் மிலிந்த் தியோராவா அல்லது சச்சின் பைலட்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூலக்கதை