ஆணோடு ஆண், பெண்ணோடு பெண்... ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அமெரிக்காவில் 73% பேர் ஆதரவு: கணவன் - மனைவி வாழ்க்கை முறை மீது வெறுப்பு

தினகரன்  தினகரன்
ஆணோடு ஆண், பெண்ணோடு பெண்... ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அமெரிக்காவில் 73% பேர் ஆதரவு: கணவன்  மனைவி வாழ்க்கை முறை மீது வெறுப்பு

நியூயார்க்: அமெரிக்க மக்களிடையே ஒரே பாலின திருமணத்திற்கு நாளுக்கு  நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்த திருமணத்துக்கு 73 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரினச் சேர்க்கைக்கு உலகில் பல நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இவர்கள் திருமணம் செய்து வாழவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இதில், முதன்முதலாக மாசாசூசெட்ஸ் மாகாணத்தில்தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற பல மாகாணங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரம், 14 மாகாணங்களில் இந்த திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து ஓரினச் சேர்க்கை பிரியர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி திருமணம் செய்து கொண்டு சட்ட அங்கீகாரத்துடன் தம்பதியராக வாழலாம். இதற்கு எவ்வித தடையும் இல்லை,’ என்று 2015ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், ‘கேலப்’ என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவில் ஒரே பாலின திருமணத்துக்கு 73 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதன் முதலில் 1996ல் இந்த அமைப்பு ஆய்வை நடத்தியபோது 27 சதவீதம் பேர் மட்டுமே ஆதரித்தனர். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், இந்த திருமணத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இளைஞர்கள் 84%, நடுத்தர வயதினர் 72%, வயதானவர்கள் 60% பேர் ஆதரித்துள்ளனர். இதன்மூலம், அமெரிக்க மக்களிடம் ஒரே பாலின திருமணத்தின் மீதான நாட்டம் அதிகமாகி வருவது தெரிகிறது. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது இயற்கையான வாழ்க்கை முறை. ஆனால், அமெரிக்கர்களிடையே ஓரின சேர்க்கை திருமணத்தின் மீது நாட்டம் அதிகமாகி வருவது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.இந்தியாவிலும் நடக்குமா?ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்படி இந்தியாவிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘ஒரே பாலின திருமணத்தை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. இதை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. இந்த திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாகிவிடும். இந்த திருமணத்தில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி முடிவு செய்வது? இந்த திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் பெரிய குழப்பம் ஏற்படும். அதனால், இதை அங்கீகரிக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை