மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை: நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ் தகவல்

தினகரன்  தினகரன்
மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை: நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ் தகவல்

திருமலை: ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு முதல் மாணவர் ேசர்க்கை ெதாடங்கப்படும்,’ என்று அதன் நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ் திருப்பதியில் தெரிவித்தார். மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியன்று  அடிக்கல் நாட்டப்பட்டது.  இருப்பினும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர, வேறு கட்டுமானப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை வேகப்படுத்த முழு முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றுள்ள மருத்துவர் ஹனுமந்த ராவ், திருப்பதியில் நேற்று கூறியதாவது: கொரோனா பேரிடர் காலம் என்பதால் காணொலி மூலமாக ஆய்வு கூட்டங்கள், கலந்தாய்வு கருத்தரங்குகள் நடக்கிறது. இந்த மாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக உள்ள விஷ்ணு மோகன் கட்டோச்சி,  தமிழக முதன்மை செயலாளர் மற்றும் 3 தமிழக எம்பிக்கள் என 17 பேருடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையுடன் வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட உள்ளது. அதன்படி, இந்த மருத்துவக் கல்லூரியை எங்கள் துணை மருத்துவமனையான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து 150 மாணவர்களுடன் தொடங்கலாம் என பரிந்துரை செய்யப்பட உள்ளது. 2வது பரிந்துரையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து செயல்படுவது அல்லது 3வதாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் மாணவர் சேர்க்கையை எங்கள் பேராசிரியர்களுடன் தொடங்குவது என பரிந்துரை செய்யப்பட உள்ளது. இதில், என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி  மாணவர் சேர்க்கை நவம்பர் அல்லது டிசம்பரில்  நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.2 மாதங்களில் கட்டிடப் பணிஹனுமந்தராவ் மேலும் கூறுகையில், ‘‘எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 ஏக்கரில் ₹1,974 கோடியில் ஜப்பான் நிதி பங்களிப்புடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட உள்ளது. மேலும், ஜப்பான் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ள நிலையில் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதற்குள் தற்காலிகமாக உள்நோயாளிகள்,  புறநோயாளிகள் பிரிவு, கிளினிக்குகள், ஆய்வகம் தொடங்கப்படும். எங்களுக்கான முழு கட்டிடம் வந்த பிறகு அங்கு நிரந்தரமாக கல்லூரி, முழு அளவில் மருத்துவமனை செயல்பட திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.

மூலக்கதை