பிரதமர் மோடிக்கு டீ வியாபாரி கடிதம் ஐயா, தாடிய வளர்க்காதீங்க…வேலை வாய்ப்பு உருவாக்குங்க: ஷேவிங் செய்ய 100-ம் அனுப்பினார்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடிக்கு டீ வியாபாரி கடிதம் ஐயா, தாடிய வளர்க்காதீங்க…வேலை வாய்ப்பு உருவாக்குங்க: ஷேவிங் செய்ய 100ம் அனுப்பினார்

புதுடெல்லி:  பிரதமர்  மோடி தனது தாடியை மழிப்பதற்காக மகாராஷ்டிராவை சேர்ந்த டீ வியாபாரி ரூ.100 மணியார்டர் செய்துள்ளார். மகாராஷ்டிராவின் பாராமதியை  சேர்ந்தவர் அனில் மோர். சிறிய டீ கடை நடத்தி வருகிறார். சிறு  வியாபாரியான இவர், பிரதமர் மோடிக்கு ரூ.100 மணியார்டர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘உங்கள் தாடியை ஷேவ் செய்யுங்கள்,’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அனில் மோர் கூறுகையில், “பிரதமர் மோடி தாடி வளர்த்துக் கொண்டுள்ளார். அவர் எதையாவது அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். எல்லா மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதுள்ள மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். கடந்த  இரண்டு ஊரடங்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதை அவர் உறுதிப்படுத்த வேண்டும்.் அவர் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவருக்கு ரூ.100 அனுப்பி இருக்கிறேன். அவர் மிக உயர்ந்த தலைவர். அவரை காயப்படுத்த நான் விரும்பவில்லை. கொரோனா நோய் தொற்றினால் ஏழை மக்களின் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்கான மிக சிறந்த வழி இதுவாகும். அதனால், இந்த வழியை தேர்வு செய்தேன்,” என்றார்.

மூலக்கதை