மழையால் கட்டிடம் இடிந்து மும்பையில் 11 பேர் பலி

தினகரன்  தினகரன்
மழையால் கட்டிடம் இடிந்து மும்பையில் 11 பேர் பலி

மும்பை: தென்மேற்கு பருவமழை மும்பையில் கடந்த சனிக்கிழமை துவங்கியது. முதல் நாளிலேயே கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின. இந்நிலையில் மால்வானி பகுதியில், அப்துல் ஹமீது சாலையில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம், மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு இடிந்து மற்றொரு கட்டிடத்தின் மீது சரிந்தது. இதனால் அந்த கட்டிடமும் இடிந்தது. இதில், பலியான 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இறந்தவர்களில் 8 பேர் சிறுவர்கள். இறந்தவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த 7 பேரில் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் உயிருடன் மீட்கப்பட்ட ரபீக் ஷேக் என்பவரின் மனைவி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இறந்து விட்டனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை