சோக்சியை நாடு கடத்த டொமினிகா உத்தரவு: இந்தியாவுக்கு அனுப்பப்படுவாரா?

தினகரன்  தினகரன்
சோக்சியை நாடு கடத்த டொமினிகா உத்தரவு: இந்தியாவுக்கு அனுப்பப்படுவாரா?

புதுடெல்லி:   இந்தியாவில் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தொழிலதிபர் மெகுல் சோக்சியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கும்படி டொமினிகா அரசு உத்தரவிட்டுள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி  கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சி,  இந்தியாவில் இருந்து தப்பி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி அவர் ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகா நாட்டுக்கு மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது நாட்டில் சட்ட விரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கு சென்ற சிபிஐ குழு, நீதிமன்ற விசாரணை தாமதத்தால் திரும்பி வந்து விட்டது. இந்நிலையில், மெகுல் சோக்சி டொமினிகாவில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டவர் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. மெகுல் சோக்சியை குடியேற தடை செய்யப்பட்டவராக   தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், ‘ஆவணங்களின் அடிப்படையில் சோக்சி இந்திய குடிமகன்தான் என்பது உறுதியாகி இருக்கிறது,’ என்று டொமினிகா பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்தார்.  சோக்சியை நாடு கடத்துவதற்கு  இந்திய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், டொமினிகா அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  இதனால், டொமினிகாவில் இருந்து சோக்சி ஆன்டிகுவாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? அல்லது இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவாரா? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

மூலக்கதை