மலாலாவுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

தினமலர்  தினமலர்
மலாலாவுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பெஷாவர்:நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த, நோபல் பரிசு வென்றுள்ள, மலாலா யூசப்சையிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பெஷாவரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசப்சையி மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மலாலா, 23, சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார்.'திருமணம் எதற்காக செய்கின்றனர் என புரிவில்லை.

உங்கள் வாழ்க்கையில் ஒருவர் இருக்க வேண்டும் என்றால், திருமண ஒப்பந்தம் ஏன் செய்ய வேண்டும். கூட்டாளியாக இருந்து விடலாமே' என அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், பெஷாவரைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பின் தலைவர் முப்தி சர்தார் அலி ஹக்கானி, 'தற்கொலை படையாக மாறி மலாலாவைக் கொல்வேன்' என, கூறினார்.

இது தொடர்பான 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.கொலை மிரட்டல் விடுத்ததுடன், மக்களிடையே கொலை செய்யத் துாண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை