நிறைவேறாத ஆசைகள் : மீனாவின் வருத்தங்களும் விருப்பமும்

தினமலர்  தினமலர்
நிறைவேறாத ஆசைகள் : மீனாவின் வருத்தங்களும் விருப்பமும்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா திரையுலகில் மொத்தம் நாற்பது ஆண்டுகளை கடந்து விட்டார். கதாநாயகியாகவே 30 ஆண்டுகள் நீடித்துவரும் மீனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் தவறவிட்ட படங்கள், தனக்கு கிடைக்காமலேயே போன கதாபாத்திரங்கள் மற்றும் இனி வரும் காலத்தில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

“எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை ஒரு படத்தில் கூட கல்லூரி மாணவியாக நடிக்கவில்லை. அதேபோல நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு நடனத்தை மையப்படுத்திய படம் ஒன்றில் நடிக்க முடியாமல் போனதும் வருத்தம் தான். மலையாளத்தில் மோகன்லால்-மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தையும், தமிழில் படையப்பா, தேவர்மகன் படங்களையும் தவறவிட்டதும் வருத்தம் தான்.

அதேபோல வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.. முன்புதான் வில்லியாக நடித்தால் இமேஜ் கெட்டுவிடுமோ என பயந்தேன். இப்போது ரசிகர்களின் மனநிலை மாறிவிட்டதால் தைரியமாக வில்லத்தனம் காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என கூறியுள்ளார் மீனா.

மூலக்கதை