கொரோனா தொற்றை முற்றிலும் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? கூடுதலாக வழங்கப்படுமா? மக்கள் நல்வாழ்வுத்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தொற்றை முற்றிலும் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? கூடுதலாக வழங்கப்படுமா? மக்கள் நல்வாழ்வுத்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: வரும் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் கொரோனா தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக, முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தொற்று அதிகம் காணப்பட்ட 11 மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கை இதே தளர்வுகளுடன் நீட்டிக்கலாமா அல்லது மேலும் தளர்வுகள் ஏதேனும் அளிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வெளியே சுற்றி வந்தனர்.

இதனால், கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. எனவே, கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்தது.

அரசின் கடும் கட்டுப்பாடுகள் மூலம் 34 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் தொற்று பாதிப்பு 17 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதேபோல், சென்னை, கோவையிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று குறைவு காரணமாக மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களிலும் படுக்கைகள் காலியாக உள்ளது.



இந்தநிலையில், 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 14ம் தேதி வரையில் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த ஊரடங்கில் சுய தொழில் செய்வோருக்கு இ-பதிவு பெற்று பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அரசின் இந்த தளர்வுகளை பயன்படுத்தி தேவையில்லாமல் வெளியே சுற்றுவோர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறது.

எனவே, அத்தியாவசிய தேவைகள் மற்றும் அரசின் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கு செல்பவர்கள் மட்டும் இ-பதிவு அல்லது தகுந்த அடையாள அட்டை பெற்று வெளியே செல்லுமாறு போலீசாரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், தொற்று தினமும் 17 ஆயிரத்துக்கு மேல் உள்ளதால், மேற்கொண்டு ஊரடங்கை இதே தளர்வுகளுடன் நீட்டிக்கலாமா, புதிய தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி. ஜி. பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



கூட்டத்தில், தொற்றை மேற்கொண்டு கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு விரிவுபடுத்துவது, தற்போது 1. 70 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவே, இதை 2 லட்சமாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதேபோல், கடந்த 7ம் தேதி அறிவிக்கபட்ட ஊரடங்கில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஒருசில அத்தியாவசிய தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டது. தற்போது, தொற்று குறைந்துள்ளதால் இந்த மாவட்டங்களில் மேற்கொண்டு தளர்வுகளை அளிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.



இதேபோல், வரும் காலங்களில் தொற்று பரவல் அதிகரித்தால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் கருதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தளர்வுகளை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

பின்னர், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நாளை அல்லது நாளை மறுநாள் அடுத்த கட்ட ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகளை வழங்குவது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை