விவசாயத் துறைக்கு தனி நிதியறிக்கை, அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
விவசாயத் துறைக்கு தனி நிதியறிக்கை, அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

*விவசாய துறைக்கு  தனி நிதியறிக்கை~ அதிகரிக்கும் எதிர்பார்ப்பு* 
 அரசின் நிதியறிக்கை என்பது ஒரு ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நோக்கங்களுடன் திட்டமிடுவதாக அமையும்.
அனைத்து துறைகளின் வருவாய் செலவுகளை ஒரே நிதி அறிக்கையில் உட்படுத்தினால் அது ஒற்றை நிதி அறிக்கையாகும். துறைதோறும் தனித்தனியாக உருவாக்கினால் அது பன்மை நிதி அறிக்கை எனப்படும்.பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒற்றை நிதியறிக்கை முறை நடைமுறையில் உள்ளது.பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பன்மை நிதியறிக்கை முறை நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் இரண்டு நிதி அறிக்கை முறை பின்பற்றப்பட்டு(இரயில்வே,பொது) வந்துள்ள நிலையில் தற்போதைய மத்திய அரசு ரயில்வே நிதியறிக்கையினை பொதுநிதிஅறிக்கையுடன் இணைத்து ஒற்றை நிதியறிக்கையாக  வெளியிட்டது.
ஒவ்வொரு துறையும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கினை வகிக்கிறது. அதை பொறுத்தே நிதியறிக்கை அமைகிறது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விவசாயத்திற்கு தனி நிதி அறிக்கை என்பது அனைவரின் கவனத்தையும் பெற்று எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான துறை விவசாயத்துறை என்பதில் ஐயமில்லை. மாநில மக்கள் தொகையில் 50% விவசாயம் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மக்கள் ஈடுபட்டுள்ளனர். கரும்பு சாகுபடியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடத்திலும்,அரிசி உற்பத்தியில் இந்தியாவில் ஆறாவது இடத்தையும் தமிழ்நாடு வகிக்கின்றது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து  காய்கறிகளும் பழங்களும் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் விவசாயத்துறையின் உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது, விவசாயிகளின் பாதுகாப்பு, அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தல்ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு நிதியறிக்கை அமையும் என அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறது.அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது .ஜூலை மாத இறுதிக்குள் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் இந்த ஆண்டு அது சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
விவசாயத் துறைக்கு என தனி நிதி அறிக்கை இந்த நிதியாண்டில் சமர்ப்பிக்கப்பட்டால் இந்தியாவில் முதல் முறையாக விவசாயத் துறைக்கு தனி நிதியறிக்கை அறிவித்த முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.

மூலக்கதை