50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையளிக்கும் அமெரிக்கா!

தினமலர்  தினமலர்
50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையளிக்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 90-க்கும் மேற்பட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு சுமார் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனின் பையோஎன்டெக் இணைந்து கோவிட் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இவை புதிய வைரஸ் வகைகளையும் சிறப்பாக எதிர்கொள்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்பார்க்கின்றன. அமெரிக்காவில் இதுவரை 64% மக்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர். தற்போது உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்களுடனான அமெரிக்க அதிபரின் சந்திப்புக்கு முன் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நன்கொடை அறிவிப்பு இதுவரை எந்த ஒரு தனிநாடும் அறிவிக்காத மிகப்பெரிய அளவாகும்.



இது பற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய நன்கொடையின் குறிக்கோள் உயிர்களைக் காப்பாற்றுவதும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதுமாகும். வரவிருக்கும் நாட்களில் அறிவிக்க உள்ள கூடுதல் நடவடிக்கைகளுக்கு இது அடித்தளம் வழங்கும். பெருந்தொற்றுக்கு எதிரான உலகின் போராட்டத்திற்கு இது சூப்பர்சார்ஜ் தரும். சுமார் 8 கோடி டோஸ்கள் ஜூன் இறுதிக்குள் நன்கொடை அளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளோம். உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்காக 200 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளனர்.


பைசர் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆல்பர்ட் போர்லா, அமெரிக்க அரசுடனான கூட்டணி கோடிக்கணக்கான தடுப்பூசி மருந்துகளை ஏழை நாடுகளுக்கு விரைவாக கொண்டு சேர்க்க உதவும் என கூறியுள்ளார். இந்த ஆண்டில் 20 கோடி தடுப்பு மருந்துகளும், 2022 முதல் பாதியில் 30 கோடி தடுப்பு மருந்துகளும் 92 நாடுகளுக்கு வழங்க உள்ளதாக உறுதிப்படுத்தினார்.

மூலக்கதை