800 சமூக விரோதிகள் கைது: காட்டி கொடுத்த 'அனம்' போன்

தினமலர்  தினமலர்
800 சமூக விரோதிகள் கைது: காட்டி கொடுத்த அனம் போன்

தி ஹேக் : அமெரிக்க-ஆஸ்திரேலிய உளவுத் துறைகளின் ரகசிய நடவடிக்கையால், 800க்கும் மேற்பட்ட, சமூக விரோதிகள் கைது செய்யப்பட்ட தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 2018ல், அமெரிக்க உளவுத் துறையான, எப்.பி.ஐ., ஆஸ்திரேலிய உளவுத் துறையுடன் இணைந்து 'ஆபரேஷன் டிராஜன் ஷீல்டு' என்ற பெயரில் ரகசிய திட்டத்தை உருவாக்கியது. இதன்படி, 'அனம்' என்ற செயலி உள்ள மொபைல் போன்கள், சமூக விரோதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்காக, போலீசுக்கு தகவல் தரும் நபர்கள், சமூக விரோத கும்பல்களில் ஊடுருவியுள்ள ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்டனர்.


ஒன்றரை லட்சம் ரூபாய் விலையுள்ள, 'அனம்' மொபைல் போனில் பேசவோ, மின்னஞ்சல் அனுப்பவோ முடியாது. படங்கள் மற்றும் தகவல்களை மட்டும் அனுப்பலாம். உளவுத் துறையால் தகவல்களை இடைமறிக்க முடியாதபடி பாதுகாப்பு அரண் வசதி உள்ளது என கூறி விற்பனை செய்ததால், உலகெங்கும் உள்ள சமூக விரோதிகள், அனம் மொபைல்போன்களை ஆர்வமுடன் வாங்கினர்.

இதையடுத்து, அவர்கள் அனம் மொபைல்போனில் அனுப்பி வந்த ரகசிய தகவல்கள், படங்கள், கூட்டாளிகளுக்கு சென்றதுடன், உளவுத் துறையின் 'செர்வர்' சாதனத்திற்கும் கிடைத்தன. இந்த தகவல்கள் அடிப்படையில், போலீசார், சமூக விரோதிகளின் ரகசிய திட்டங்களை அறிந்து, அவர்களை கைது செய்து வந்தனர். நாளடைவில் இந்த திட்டத்தில் மேலும் பல நாடுகள் இணைந்தன.

இந்நிலையில், நேற்று, நெதர்லாந்தில், எப்.பி.ஐ., யின் உதவி இயக்குனர் கால்வின் ஷிவர்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:'ஆபரேஷன் டிராஜன் ஷீல்டு' திட்டம் நல்ல பலனை தந்துள்ளது. நுாற்றுக்கு மேற்பட்ட நாடுகளில், முன்னுாறுக்கும் அதிகமான கிரிமினல் கும்பல்களுக்கு, அனம் மொபைல் போன்கள் விற்கப்பட்டன. இதன் மூலம், கிரிமினல்கள் அனுப்பிய, 2.70 கோடி ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அதன் அடிப்படையில், 800க்கும் அதிகமான சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நிகழ்த்தவிருந்த, 150 படுகொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. 250 ஆயுதங்கள், 300 கோடி ரூபாய் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் ரகசிய திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.

மூலக்கதை