சீன போட்டிக்கு எதிரான மசோதா அமெரிக்க பார்லியில் நிறைவேறியது

தினமலர்  தினமலர்
சீன போட்டிக்கு எதிரான மசோதா அமெரிக்க பார்லியில் நிறைவேறியது

வாஷிங்டன்-சீன போட்டியை எதிர்கொள்ளும் வகையிலான புதிய மசோதாவுக்கு, அமெரிக்க பார்லி.,யின் மேல்சபையான, செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

மின்னணு உற்பத்தி உட்பட பல்வேறு துறைகளில், சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், முக்கிய பொருட்களின் வினியோகத்தை சீனா நிறுத்தியதால், பல நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்நிலையில் பொருளாதாரம், வர்த்தகத்தில், சீனாவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்காவில், புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இது நிறைவேறி சட்டமாகியிருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார போட்டிகளை எதிர்கொள்ளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

இதற்காக, 73 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. மொத்தம், 100 பேர் உள்ள செனட் சபையில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு தலா, 50 உறுப்பினர் உள்ளனர். இந்த மசோதா, 68 - 32 என்ற கணக்கில், ஓட்டெடுப்பில் நிறைவேறியது'உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, எதையும் செய்வதற்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. சீன நாட்டினர், நம் நாட்டில் பணியாற்றி, உளவு பார்த்து, நம்முடைய புதிய கண்டுபிடிப்புகளை திருடி வந்துள்ளனர். 'அதை தடுக்கும் வகையில், இந்த புதிய மசோதா அமைந்துள்ளது' என, எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை