2வது டெஸ்ட் இன்று தொடக்கம் இங்கிலாந்து - நியூசி. பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
2வது டெஸ்ட் இன்று தொடக்கம் இங்கிலாந்து  நியூசி. பலப்பரீட்சை

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் நடந்த முதல் டெஸ்ட்  டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி அணியின் கையே ஓங்கியிருந்தது. அறிமுக வீரர் கான்வே இரட்டைச் சதம் விளாசியதும்,  டிம் சவுத்தீயின் விக்கெட் வேட்டையும் ஹைலைட்டாக ஒருந்தன. உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் பைனலுக்கு முன்னேறிய தகுதியான அணி என்பதை முதல் டெஸ்ட்டில் நியூசி நிரூபித்துள்ளது. ஆனாலும் வெற்றி வசப்படவில்லை. மழையால் 3வது நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதும், இங்கிலாந்து வீரர்  ரோரி பர்ன்சின் சதமும்  டிராவில் முடிய காரணமாக அமைந்தன.இந்நிலையில், 2வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்ஹாமில் இன்று தொடங்குகிறது. அனுபவ வேகம் டிரென்ட் போல்ட் வருகை நியூசிக்கு பக்கபலமாக இருக்கும். அதே நேரத்தில் காயத்தால் அவதிப்படும் வில்லியம்சன், சான்ட்னர் ஆகியோர் அணியில் இடம் பெறுவது சந்தேகம். அதே நிலைமையில்தான் இங்கிலாந்தும்  இருக்கிறது. முதல் டெஸ்டில் அசத்திய அறிமுக வீரர் ஆலிவர் ராபின்சன் ‘சர்ச்சை கருத்துகளால்’ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது இங்கிலாந்துக்கு இழப்பாகத்தான் இருக்கும். இந்த 2 அணிகளும் அடுத்து  இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. அதனால் இந்த டெஸ்டில் வென்று இந்தியாவை உற்சாகமாக எதிர்கொள்ளும் முனைப்புடன் இரு அணிகளுமே மல்லுக்கட்டுவதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மூலக்கதை