பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் சக்கரி: நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் சக்கரி: நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் வெளியேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்குடன் மோதிய கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ரோலண்ட் கேரோசில் நேற்று நடந்த கால் இறுதியில் போலந்தின் ஸ்வியாடெக்குடன் (20 வயது, 8வது ரேங்க்) மோதிய சக்கரி (25 வயது, 17வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் வீராங்கனை என்ற பெருமை சக்கரிக்கு கிடைத்துள்ளது. பிரெஞ்ச் ஓபனில் இதற்கு முன் அவர் 3வது சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்புடன் களமிறங்கிய ஸ்வியாடெக் ஏமாற்றத்துடன் வெளியேறினார். கிரெஜ்சிகோவா அசத்தல்: மற்றொரு கால் இறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் (17 வயது, 24வது ரேங்க்), செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா (25 வயது, 33வது ரேங்க்) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த முதல் செட்டில் 7-6 (8-6) என டை பிரேக்கரில் போராடி வென்ற கிரெஜ்சிகோவா, அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். கோகோ காபின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த அவர் 7-6 (8-6), 6-3 என நேர் செட்களில் வென்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் கிரெஜ்சிகோவா - சக்கரி, பாவ்லியுசென்கோவா - தமரா ஸிடான்செக் மோத உள்ளனர்.மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் சக வீராங்கனை கேதரினா சினியகோவாவுடன் இணைந்து களமிறங்கிய கிரெஜ்சிகோவா, அதே நாட்டை சேர்ந்த பிளிஸ்கோவா சகோதரிகளின் சவாலை எதிர்கொண்டார். இதில் சினியகோவா - கிரெஜ்சிகோவா ஜோடி அபாரமாக விளையாடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. நடால் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நேற்று களமிறங்கிய நடப்பு சாம்பியன் ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 45 நிமிடத்துக்கு நீடித்தது.

மூலக்கதை