வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
வெஸ்ட் இண்டீஸ்  தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள  தென் ஆப்ரிக்கா அணி அங்கு   2 டெஸ்ட்,  5 டி20 ஆட்டங்களை கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்  இன்றும் , 2வது டெஸ்ட் ஜூன் 18ம் தேதியும் செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது. டி20 ஆட்டங்கள்  ஜூன்  26, 27, 29,  ஜூலை 1, 3 தேதிகளில் கிரெனடாவில் நடைபெறும். டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரெய்க் பிராத்வெய்ட் தலைமையிலும்,  தென் ஆப்ரிக்கா அணி டீன் எல்கர் தலைமையிலும் களமிறங்குகின்றன.இந்த 2 அணிகளும் இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளன. அவற்றில் 1991-92ல் நடந்த முதல் டெஸ்ட் தொடரை மட்டுமே வெஸ்ட் இன்டீஸ் வென்றது. அதன் பிறகு 2014-15 வரை நடந்த எஞ்சிய 7 தொடர்களையும் தென் ஆப்ரிக்கா தான் வென்றுள்ளது. அவற்றில் 5 முறை வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. மொத்தத்தில் இந்த இரு அணிகளும் இதுவரை 28 டெஸ்ட்களில் விளையாடி உள்ளன. அவற்றில் வெஸ்ட் இண்டீஸ் 3லும், தென் ஆப்ரிக்கா 18 டெஸ்ட்களிலும் வென்றுள்ளன. எஞ்சிய 7 டெஸ்ட் டிராவாகி உள்ளன. அதே நேரத்தில், சமீபத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதும், இலங்கைக்கு எதிரான தொடரை 0-0 என்ற கணக்கில் டிரா செய்ததும் வெஸ்ட் இண்டீசுக்கு உற்சாகத்தை கொடுக்கும். தென் ஆப்ரிக்கா சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் 2-0 என்ற கணக்கில் இலங்கையை வென்றும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தும் உள்ளது. இரு அணிகளுமே டெஸ்ட் போட்டிகளில் புதிய எழுச்சி காணும் உத்வேகத்துடன் உள்ளதால், இந்த தொடரில் அனல் பறப்பது உறுதி.

மூலக்கதை