நாட்டுக்காக அதிக கோல் மெஸ்ஸியை முந்தினார் செட்ரி: உலகளவில் 2வது இடம்

தினகரன்  தினகரன்
நாட்டுக்காக அதிக கோல் மெஸ்ஸியை முந்தினார் செட்ரி: உலகளவில் 2வது இடம்

புதுடெல்லி,  ஜூன் 9: உலகளவில் தாய் நாட்டுக்காக அதிக கோல்கள் அடித்த, இன்னும் ஆடிக் கொண்டிருக்கும்  கால்பந்து வீரர்கள் வரிசையில்   பிரபல வீரர்  மெஸ்ஸியை முந்திய  சுனில் செட்ரி  2வது இடத்தை பிடித்துள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான,   ஆசிய கண்ட அணிகளை தேர்வு செய்யும் தகுதிச்சுற்று  ஆட்டங்கள்  கத்தாரில் நடக்கிறது.  கத்தாருக்கு எதிரான தோல்விக்கு  பிறகு  தகுதிச்சுற்றில் நீடிக்கும் வாய்ப்பை இந்தியா இழந்து விட்டது. ஆனாலும் எஞ்சிய ஆட்டங்களில்களில் கிடைக்கும் வெற்றிகள் ஆசிய கோப்பைக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்கும். அதனால் இந்திய அணி எஞ்சிய ஆட்டங்களில் வெல்ல தீவிரமாக உள்ளது.அதற்கு ஏற்ப நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. ஆட்டத்தின் 2 கோல்களையும் கேப்டன் சுனில் செட்ரி, இந்தியாவை 6 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டியில் வெற்றி பெற வைத்துள்ளார். கூடவே உலக அளவிலும் புதிய சாதனையை படைத்துள்ளார்.இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில்,   சர்வதேச ஆட்டங்களில் அதிக கோல்கள் அடித்தவர்கள்  பட்டியலில்  அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியை முந்தியதுடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். செட்ரி நேற்று முன்தினம் வரை   நாட்டுக்காக  72கோல்கள் அடித்து  அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸி, சவுதி அரேபியா வீரர்  மஜீத் அப்துல்லா ஆகியோருடன் 3வது இடத்தை பகிர்ந்துக் கொண்டு இருந்தார். ஐக்கிய அரபு அமீரக வீரர்  அலி மாபகுத் 73 கோல்களுடன் 2வது இடத்தில்  இருந்தார். இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான கோல் மூலம் மெஸ்ஸியை மட்டுமின்றி அலியையும் முந்திய செட்ரி 2வது இடத்தை பிடித்துள்ளார்.  இப்போதும் ஆடும் வீரர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ  103கோல்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஓய்வு பெற்ற வீரர்களையும் கணக்கில் எடுத்தால் ரொனால்டோ 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஈரானின் அலி டாயி 109 கோல்களுடன் முதல்   இடத்தில் இருக்கிறார். செட்ரி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

மூலக்கதை