மஞ்சரேக்கர் சொல்கிறார்: அஷ்வின் சிறந்த வீரர் இல்லை : ரசிகர்கள் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
மஞ்சரேக்கர் சொல்கிறார்: அஷ்வின் சிறந்த வீரர் இல்லை : ரசிகர்கள் எதிர்ப்பு

மும்பை: ‘வெளிநாடுகளில் சாதிக்காத அஷ்வினை எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் என்று சொல்ல முடியாது’ என்ற முன்னாள் வீரர் மஞ்சரேக்கர் கருத்துக்கு ரசிகர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், ‘அஸ்வின் விளையாடுவதை பார்க்கும் போது அவர் சிறந்த பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் என்று மக்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  அவரால் நியூசிலாந்து, இங்கிலாந்து,  ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா நாடுகளில்  ஒருமுறை கூட 5 விக்கெட் எடுக்கவில்லை. இந்திய ஆடுகளங்களில்தான் அவர் சாதித்துள்ளார்’ என்று கூறியுள்ளார். அவருக்கு அந்நியன் பட அம்பி பாணியில் அஷ்வின், ‘ அப்படி சொல்லாதடா ச்சாரி... மனசு வலிக்கிறது’ என்று ஜாலியாக பதில் சொன்னார்.  அப்போதும் விடாத மஞ்ரேக்கர், ‘இந்த காலத்தில்  எளிமையான கருத்துகளை பார்க்க மனம் வலிக்கிறது. சாரி’ என்று சிரிப்புகளுடன் பதில்  அளித்தார்.  பிரச்னை இத்துடன் முடியவி்லலை.  அஷ்வின் சாதனைகளை பட்டியல் போட்டு ரசிகர்கள்,  தொடர்ந்து மஞ்சரேக்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். கூடவே  மஞ்சரேக்கருக்கு நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் ஆகியோர் அஷ்வினுக்கு  ஆதரவாக கருத்துகளை சொல்லியுள்ளனர். ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் இயான் சாப்பல், ‘மஞ்சரேக்கர் கருத்துகள் குப்பை’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.  மஞ்சரேக்கர் சில நாட்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவையும் இப்படிதான் விமர்சித்திருந்தார்.  இப்படி கண்டபடி பேசுவதால்,  பிசிசிஐ வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து மஞ்சரேக்கர் சமீபத்தில் நீக்கப்பட்டார். அசத்தல் அஷ்வின்: சர்வதேச அளவில் அஷ்வின்,   பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்திலும், ஆல்ரவுண்டர் தர வரிசையில் 4வது இடத்திலும் இருக்கிறார். இதுவரை 78 டெஸ்ட்களில் விளையாடி  409 விக்கெட்களை அள்ளியுள்ளார். அதில் 5 விக்கெட்களை 30 முறையும், 10 விக்கெட்களை 7முறையும் கைப்பற்றி இருக்கிறார்.  கூடவே 5 சதம், 11 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

மூலக்கதை