உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா

தினகரன்  தினகரன்
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா

தோகா: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி 2-0 என வங்கதேசத்தை வீழ்த்தியது. `பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 2022ல் நடக்க உள்ளது. இதற்கான ஆசிய அணிகள் மற்றும் ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் கத்தாரில் நடக்கின்றன. `இ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, உலக கோப்பை தகுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் நேற்று தர வரிசையில் 105வது இடத்திலுள்ள இந்திய அணி, 184 வது இடத்தில் இருக்கும் வங்கதேசத்தை சந்தித்தது. போட்டியின் 11வது நிமிடம் பிபின் சிங் கொடுத்த பந்தை தலையால் முட்டி இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி கோலாக்க முயன்றார். 20 வது நிமிடம் உடாண்டா சிங் அடித்த பந்து கோல் போஸ்ட்டை விட்டு விலகிச் சென்றது. 35வது நிமிடம் ‘கார்னர் கிக்’ வாய்ப்பில் பிரண்டன் பெர்ணான்டஸ் கொடுத்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயன்ற சுனில் செத்ரியின் முயற்சியை வங்கதேச வீரர்கள் எளிதாக தடுத்தனர். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில், 63வது நிமிடம் சுனில் செத்ரி தலையால் முட்டிய பந்து, கோல் போஸ்ட்டை விட்டு வலது புறமாகச் சென்றது. போட்டியின் 79 வது நிமிடம் ஆஷிக் குருனியன் கொடுத்த பந்தை பெற்ற சுனில் செத்ரி, அதே வேகத்தில் அப்படியே தலையால் முட்டி, கோலாக மாற்றினார். நான்கு போட்டிக்குப் பின் இவர் அடித்த முதல் கோல் இது. ஆட்டம் முடிவதற்கு சற்று முன், சுனில் செத்ரி (90+2 வது), இப்போட்டியின் இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல்முறை உலக கோப்பை 2022 கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா, நேற்று முதல் வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டியில் 1 வெற்றி, 3 தோல்வி, 3 ‘டிரா’ செய்த இந்தியா, 6 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. அடுத்து ஆப்கானிஸ்தானை (ஜூன் 15) வென்றால், ஆசிய கோப்பை தகுதிச்சுற்றின் 3 வது சுற்றுக்கு முன்னேறலாம்.

மூலக்கதை