இது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: சிந்தியுங்கள் முதல்வரே!

உலக நாடு தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


பா.மீனா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம்' என, தமிழக அரசு பகீரத முயற்சி எடுத்து வருகிறது. வாழ்த்துகள்! முயற்சி பலன் தருமா? சந்தேகம் தான்! ஏனெனில்...
*சமூக இடைவெளி என்ற தத்துவத்தை, நம் கவர்னர் முதற்கொண்டு, யாருமே புரிந்து கொள்ளவில்லை. நிவாரண நிதி கொடுப்பதாகக் கூறி,முதல்வர் ஸ்டாலினைத் தன் அரண்மனைக்கு வரவழைத்து, ஆறு அடி இடைவெளி இல்லாமல், அருகில் அமைச்சர் துரைமுருகனையும் நிறுத்தி வைத்து, 'போட்டோ'வுக்கு 'போஸ்' கொடுத்து, நிதி அளிக்கிறார். மக்களுக்குத் தெரிய வேண்டுமாம், இவர் நிதி கொடுத்தார் என்று! ஆக, தமிழகத்தின் முதல் பிரஜைக்கே, 'சமூக இடைவெளி' குறித்துத் தெரியவில்லை

* தினமும் காலை 10:00 மணி வரை, காய்கறி கடைகள் இயங்கும் என அறிவித்து, அத்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இப்படி மக்களை கூடச் செய்வதில் இருக்கும் சிக்கலைப் பாருங்கள்.

* காய்கறி வாங்க வருவோரில் பாதிக்குப் பாதி பேராவது, நோயாளியுடன் மருத்துவமனையில் தங்கியவராக இருக்கலாம்; நோயாளியுடன் பல காலம் வீட்டில் தங்கியவராக இருக்கலாம். அல்லது அறிகுறிகளே இல்லாமல், வைரசைத் தாங்கியவர்களாக இருக்கலாம். அவர்கள் இப்படி பொதுவெளிக்கு வந்தால், மற்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? சிந்தியுங்கள் முதல்வரே!

* அடுத்து ரேஷன் கடை. முன்பு சொன்ன இரண்டு விஷயங்கள் மூலமாகவே, இதுவும் புரிந்திருக்கும் உங்களுக்கு. யாருக்கும் இப்போது சுய விளம்பரம் தேவையில்லை. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் முண்டியடித்து ரேஷன் கடையில் நிற்பானேன்? சிந்தியுங்கள் முதல்வரே!

* இப்படி நீங்களாக, ஜன நடமாட்டத்தை ஊக்குவிக்கும் காரணிகளை உருவாக்கி விட்டு, பின், 'இ - பதிவு' தருகிறேன் என்கிறீர்கள். எதற்கு இ - பதிவு? இந்த காரணிகளை நீக்கிவிட்டு, முக்கியமான, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்கள் மட்டுமே நடமாடும் நிலையை ஏற்படுத்தி விட்டால், இ - பதிவு தொந்தரவே வேண்டாமே?

* வர்த்தக நிறுவனங்கள், பணக்காரர்கள், முதல்வர் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்கின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். இவர்கள் எதற்கு உங்களை நேரில் சந்தித்து, 'பெரிய்ய்ய்ய' காசோலை தயாரித்து, உங்களிடம் கொடுக்க வேண்டும்? அங்கேயும், 'சோஷியல் டிஸ்டன்சிங்' இல்லையே? அருகருகே தான் நின்று காசோலை வாங்குகிறீர்கள்? உங்கள் உயிர் முக்கியம் முதல்வரே...சிந்தியுங்கள்!

* வியாபாரிகளிடம், 'சிஸ்டமேட்டிக்'காக அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்து, வீட்டுக்கு வீடு வினியோகித்தால், மக்கள் உயிரையும் காக்கலாம்; போலீசாரின் உயிரையும் காக்கலாம். சிந்தியுங்கள் முதல்வரே!

மூலக்கதை