தமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்

தினமலர்  தினமலர்
தமிழக அரசு மரியாதையுடன் கி.ரா., உடல் இன்று தகனம்

புதுச்சேரி: கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல், அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில், தமிழக அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனவும், இலக்கிய உலகத்தால் கி.ரா., என்றும், அன்போடு அழைக்கப்பட்டவர் கி.ராஜநாராயணன், 99; அவருடைய இலக்கிய பணியை பாராட்டி, புதுச்சேரி அரசு அளித்த லாஸ்பேட்டை அரசு வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். தள்ளாத வயதிலும் சோர்வின்றி எழுதி வந்தார்.

முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, லாஸ்பேட்டை வீட்டில் ஓய்வெடுத்த கி.ரா., நான்கு நாட்களாக சரியாக உணவருந்தாமல், சிறிதளவு பால் மட்டுமே குடித்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு காலமானார்.

கவர்னர் அஞ்சலி


அவரது உடலுக்கு நேற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முதல்வர் ஸ்டாலின் சார்பில், சிவா எம்.எல்.ஏ., உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.கி.ரா.,வின் உடல், புதுச்சேரியில் இருந்து மதியம், 1:35 மணிக்கு, அவரது சொந்த ஊரான துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்திற்கு, தமிழக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

முன்னதாக, புதுச்சேரி அரசு சார்பில் அவரதுஉடலுக்கு போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது. கி.ரா.,வின் உடல், இடைசெவல் கிராமத்தில் இன்று மதியம், 12:00 மணியளவில், தமிழக அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.

வாழ்க்கை வரலாறு


கி.ராஜநாராயணன், இடைசெவல் கிராமத்தில் 1923 செப்., 16ல் பிறந்தார். இவரது இயற்பெயர், ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம். இதை சுருக்கி கி.ராஜநாராயணன் என வைத்துக் கொண்டார். தந்தை விவசாயி; தந்தையுடன் விவசாயம் செய்த கி.ரா., ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.தன், 40-வது வயதிற்கு மேல் எழுதத் தொடங்கிய கி.ரா.,வின் முதல் சிறுகதையான, 'மாயமான்' 1958-ல், சரஸ்வதி இதழில் வெளியானது.

கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கை, நம்பிக்கை, துன்பங்கள் போன்றவற்றை தன் எழுத்தின் வாயிலாக காட்சிப்படுத்தினார்.புதுச்சேரி பல்கலை கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய கி.ரா., கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதியை உருவாக்கியவர் என்ற பெருமையை உடையவர்.

விருதுகள் ஏராளம்


நாவல் - ஐந்து, குறுநாவல் - இரண்டு, சிறுகதைகள் - 22 உட்பட, ஏராளமான கட்டுரைகளும் எழுதியுள்ளார். 99வது வயதிலும், 'மிச்சக்கதைகள்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக, 1991-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இலக்கிய சிந்தனை, தமிழக அரசின் விருது, கனடா இலக்கிய தோட்டம் அமைப்பின் தமிழ் இலக்கியச் சாதனை உள்ளிட்ட பல்வேறு விருதுகள், இவரது படைப்புகளை அலங்கரித்தன.

தேர்ந்த கதை சொல்லியான இவர், கொரோனா காலத்தில், தன் கைகளால் எழுதிய, 'அண்டரெண்டப் பட்சி' என்ற நுாலை கையெழுத்துப் பிரதியாகவே வெளியிட்டார். அதை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என்பது கி.ரா.,வின் ஆசை. அது அப்படியே நிறைவேற்றப்பட்டது.

இவரது சில கதைகள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது, 'கிடை' என்ற குறுநாவல், ஒருத்தி என்ற திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. சாகித்ய அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராக, 1998 முதல் 2002 வரை செயல்பட்டார்.கி.ரா.,வின் மனைவி கணவதி, 89 வயதில், 2019ல் காலமானார். திவாகரன், 66; பிரபாகரன், 60, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

வாசகருக்கு 'ராயல்டி'


எழுத்தாளர் கி.ரா., கடந்தாண்டு டிசம்பர் 26ல் ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதில், தன் படைப்புகள் அனைத்தும், தன் வாசகரான புதுவை இளவேனில் மற்றும் தன் இரண்டு மகன்களுக்கும் தான் சொந்தம் என கைப்பட எழுதியிருந்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக தன் படைப்புகள் அனைத்தையும், வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதி கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை.

தலைவர்கள் இரங்கல்


கி.ரா., மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த, கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்; ஏட்டறிவை காட்டிலும், பட்டறிவால் பல இலக்கிய படைப்புகளை தந்தவர்.அவர் படித்த, இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

அவரது நினைவை போற்றும் வகையில், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையில், அவரது புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை, மாணவர்களும், பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், ஓர் அரங்கம் நிறுவப்படும்.

கலை இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.,வுக்கு, கோவில்பட்டியில் அரசு சார்பில், சிலை அமைக்கப்படும். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதுபோல எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் முருகன், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

4 தலைகள் உள்ளவர்!


கி.ரா., குறித்து, எழுத்தாளர் நாறும்பூநாதன் கூறியதாவது: கி.ரா., தமக்கு நான்கு தலைகள் உண்டு என்பார். சங்கீதம், அரசியல், இலக்கியம், சுயம் என நான்காக செயல்பட்டார். சங்கீதத்திற்கு முக்கியத்துவம் தருவார்.கி.ரா.,விற்கு இசை மீது தீராத காதல் உண்டு. சிறு வயதில் குருமலை வித்வானிடம் நாதஸ்வரம் பயின்றார். அதனால், நாதஸ்வர விற்பன்னர்கள் காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரிடம் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

அவ்வப்போது, திருநெல்வேலியில் ரசிகமணி டி.கே.சி., நடத்தும் வட்டத்தொட்டி இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பார். கி.ரா., இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்தார். இதனால், 1949ல் தொடரப்பட்ட இரண்டாம் நெல்லை சதி வழக்கில், ஆர்.எஸ்.ஜேக்கப், நல்லகண்ணு ஆகியோருடன் கி.ரா., மீதும் வழக்கு பாய்ந்தது.ரசிகமணி தான் காங்., மேலிடத்தில் பேசி, அவரை வழக்கில் இருந்து விடுவித்தார். வயது வித்தியாசம் பாராது, இளையவர்களிடமும் பழகினார்; அவர்களை ஊக்குவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் கூறியதாவது:கி.ரா., இல்லையென்றால், கோவில்பட்டியில் என்னை போன்றவர்கள் எழுத்தாளர்களாக உருவாகி இருக்க முடியாது. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தபோது, கி.ரா.,வின் இல்லம் தான் எங்களுக்கு உறைவிடம்.தந்தை, மகனை உருவாக்குவது போல எழுத்தாளர்களை உருவாக்கியவர் அவர். இதழ்களில் தங்கள் படைப்பு வெளியானது குறித்து, கடிதம் எழுதுவோருக்கு முதலில் படைப்பை பாராட்டிவிட்டு, அதில் என்னென்ன மாற்றங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை குறிப்பிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை