காலத்தாற் செய்யும் உதவி! ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்

தினமலர்  தினமலர்
காலத்தாற் செய்யும் உதவி! ஊர் அடங்கினாலும், முடங்காத சேவை: இன்னுயிர் காக்கும் உன்னத உதவி: முன்னோடியாக, திகழும் திருப்பூர்

திருப்பூர்:ஊரடங்கால், மாநிலமே, முடங்கிப்போனாலும், திருப்பூரில், சமூக அக்கறையுடன் பொதுமக்களின் இன்னுயிர் காக்கும் பணிகள், முடங்காமல் தொடர்கின்றன. தன்னார்வலர்களின் சேவை, மெச்சத்தகுந்ததாக உள்ளது.கடந்த 10ம் தேதி முதல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகின; கடந்த 15ம் தேதி முதல், இவை மேலும் கூடுதலாகின.

திருப்பூரில், கொரோனா பரவலின் தீவிரத்தை புரிந்து கொண்டுள்ள பொதுமக்கள், மெல்ல மெல்ல, கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பதில், விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.தொழில்துறையின் சமூக அக்கறைதிருப்பூருக்கு, பின்னலாடை ஏற்றுமதி உயிர்நாடி என்றபோதிலும், தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதி நிறுவனங்களை மூட, தொழில்துறையினர் சம்மதித்தனர். விசைத்தறிகள் உள்ளிட்டவையும் இயங்கவில்லை.
தொழில்துறையினராகட்டும்; தொழிலாளர்களாகட்டும்... கொரோனா, இவர்களில் பெரும்பாலானோரை முடக்கிப்போடவில்லை என்பதே நிதர்சனம். கொரோனா பாதித்தோர் உட்பட, தற்போது, யாருக்கு எத்தகைய உதவி அவசியமாக தேவைப்படுகிறதோ, இவர்கள் இணைந்து, அதைப் பொருத்தமான இடத்தில், உகந்த நேரத்தில் செய்து வருகின்றனர்.
இது, காலத்தாற் செய்த உதவியாக போற்றப்படுகிறது.தமிழகத்துக்கே முன்னுதாரணம்ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல், உயிருக்கு போராடிய நிலையில், அரசு மருத்துவமனை முன்பு நோயாளிகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதை, தங்கள் சமயோசிதம் மூலம், இல்லாமல் செய்ததோடு, உயிரிழப்புகளையும் இவர்களது ஒப்பற்ற சேவை தடுத்து வருகிறது.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பஸ் வழங்கப்பட்டது.
தமிழக அரசே, இத்தகைய திட்டத்தை வழிமொழிந்திருக்கிறது. கூடுதலாக இரண்டு ஆக்சிஜன் பஸ்கள், திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளன.இதேபோல், ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கும் முயற்சியும் செவ்வனே நடக்கிறது. அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தன்னார்வலர்கள் மூலம், கொரோனா படுக்கை வசதிகள் அமைக்கப்படுகின்றன.
வாடிய மனிதரை கண்டால் உதவி...
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் இதயம், மனிதர்களுடையது; மனிதர்களே, உணவின்றி வாடிப்போனால், சும்மா இருப்பார்களா! திருப்பூரில், சாலையோரம் வசிக்கும் மக்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், வேலையின்றி தவிப்போர் என, ஏழைகளுக்கு, நல் இதயங்கள், உணவை வழங்குகின்றன.

'மற்ற எந்தப்பொருளை மனிதர்களுக்கு கொடுத்தாலும், ஆசை அதிகரிக்கும்; ஆனால், வயிறு நிறைந்துவிட்டால், அதற்கு மேல், துளி அன்னத்தை கூட, கூடுதலாக மனிதன் கேட்கமாட்டான்; தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்று, உவகையுடன் கூறுகின்றனர், உணவு அளிக்கும் 'அட்சய பாத்திரங்களாக' மாறியிருக்கும், தன்னார்வலர்கள்.
நீக்கமற நிறைந்து...சேவையில் முகிழ்ந்து!
கொரோனா பரவலால், வேறு பல மாவட்டங்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கின்றன. ஆனால், திருப்பூரில், கொரோனா பரவலின் வீரியம் அதிகரித்திருந்தாலும்கூட, மன திடத்துடன் களமிறங்கி பணிபுரியும், தன்னார்வலர்களின் ஒப்பற்ற சேவை கைகொடுப்பதால், மாவட்ட நிர்வாகமும், சுறுசுறுப்பு குறையாமல் பணிபுரிகிறது.வருவாய், மருத்துவம், சுகாதாரம், உள்ளாட்சி, போலீஸ் உட்பட அனைத்து துறை முன்களப்பணியாளர்களுடன், முதலாளிகளும், தொழிலாளர்களும் இணைந்து செய்யும் கொரோனா கால சேவை, காலத்தால் அழியாது என்பது நிச்சயம்!

மூலக்கதை