ஆளை விடுங்க சாமி! புலம்பெயர் தொழிலாளர்கள் 'டாட்டா' :கோவை தொழில் துறையினர் கவலை

தினமலர்  தினமலர்
ஆளை விடுங்க சாமி! புலம்பெயர் தொழிலாளர்கள் டாட்டா :கோவை தொழில் துறையினர் கவலை

கோவை: கோவையில் இருந்து, 50 சதவீதத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களை தக்கவைக்கும் முனைப்பில், தொழில் துறையினர் இறங்கியுள்ளனர். தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து, அவர்களுக்கு தைரியம் அளிக்க, அரசு முன்வர வேண்டும் என்று, தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கொரோனா முதல் அலையால், கடந்தாண்டு தொழில்கள் முடங்கி, பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிப்புகளில் இருந்து தொழில் துறையினர் மீள, அவசரகால கடன் உதவி, கடன் தவணை செலுத்த அவகாசம் உள்ளிட்ட, அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.இதனால், கடந்தாண்டு இறுதி முதலே தொழிற்சாலைகள் உற்பத்தியை துவங்கின. இவ்வாண்டு கிட்டத்தட்ட பழைய நிலையை, தொழில் நிறுவனங்கள் எட்டின.

துரதிர்ஷ்டவசமாக கொரோனா இரண்டாவது அலையால், தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவையில் நோய் பாதிப்பு அதிகரிப்பால், புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் மால்டாவுக்கும், டில்லிக்கும், எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கும், கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களை பிடிக்க, கோவையின் பல்வேறு பகு திகளில் இருந்து, நடந்தே கோவை ரயில்வே ஸ்டேஷனை, வடமாநில தொழிலாளர்கள் அடைந்து வருகின்றனர்.கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்(கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது:எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் மட்டும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், கோவையில் பணிபுரிகின்றனர்.

தற்போது, ரயில்கள், பஸ்கள் வாயிலாக, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சென்று விட்டனர். ஊரடங்கு அச்சம் காரணமாக, உடனே கிளம்பி வருமாறு, உறவினர்கள் தரும் அழுத்தமே காரணம்.வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாமல், இங்குள்ள தொழில் நிறுவனங்களை எதிர்காலத்தில் நடத்துவது சிரமம்தான். எனவே, அவர்கள் கிளம்பிச் செல்வதை தடுக்க, தொழிற்சாலை வளாகங்களில் அரசு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். இது, அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்க உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை