ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்

தினகரன்  தினகரன்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு எதிரான பைனல் அற்புதமான சவால்...: கேன் வில்லியம்சன் சொல்கிறார்

லண்டன்,: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அற்புதமான சவால் என்று  நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்  தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த பரபரப்பான இறுதிப்போட்டி, இங்கிலாந்தின் சவுத்ஹாம்ப்டனில் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது.  புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இந்த  இறுதிப்போட்டியில் விளையாட உள்ளன.இதில் பங்கேற்க உள்ள நியூசி. வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து போய் சேர்ந்து விட்டனர். ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் கேன் உள்ளிட்ட 4 நியூசி வீரர்கள் நேரடியாக மாலத்தீவு வழியாக இங்கிலாந்து போய்ச் சேர்ந்தனர். மற்றவர்கள்  நியூசியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர். இந்தியாவுடன் பைனலில் மோதுவதற்கு முன்பாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2ம் தேதியும், 2வது டெஸ்ட் பர்மிங்காம்,  எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூன் 10ம் தேதியும் தொடங்குகிறது.இந்நிலையில் ஐசிசி  பதிவேற்றியுள்ள வீடியோ ஒன்றில், ‘நாங்கள் எப்போது இந்தியாவுக்கு எதிராக விளையாடினாலும் அது  அற்புதமான  சவாலாக இருக்கும். அதனால் அவர்களுக்கு எதிராக விளையாடுவது உற்சாகமாக இருக்கிறது. அதிலும்  ஐசிசி டெஸ்ட்  இறுதிப்போட்டியில் விளையாடுவது  உண்மையில் உற்சாகமானது. வெளிப்படையாக சொல்வதென்றால் அதில் வெல்வது இன்னும் சிறப்பானதாக அமையும். இறுதிப்போட்டிக்கு முன்பு நடந்த ஐசிசி லீக் டெஸ்ட்கள்  தரமானவையாக இருந்தன. உற்சாகத்தை அளித்தன. அதிலும் ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு எதிரான தொடர், பாகிஸ்தானுக்கு எதிரான எங்கள் தொடர் ஆகியவை கடும் சவால்கள் நிறைந்தவை. வெற்றி பெற  கடுமையாகப்  போராட வேண்டி  இருந்தன. அப்படி போராடுவது நல்ல விஷயம்’ என்று  கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். பைனலுக்கான ஒருமாத கவுன்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, நியூசி. கேப்டன் வில்லியம்சன் இருவரின் டெஸ்ட் ரன் குவிப்பு புள்ளி  விவரங்களை வெளியிட்டு சமபலத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

மூலக்கதை