ஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்

தினகரன்  தினகரன்
ஜெனீவா ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் பெடரர்

ஜெனீவா: காயம், அறுவைசிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்த சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் ஓராண்டுக்கு பிறகு நேற்று ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் மீண்டும் களமிறங்கி 2வது சுற்றில் போராடி தோற்றார். பந்து பொறுக்கி போடும் சிறுவனாக இருந்து, 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மகத்தான சாதனை வீரராக உயர்ந்தவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர்(39). விம்பிள்டன்னில் 8, ஆஸ்திரேலியா ஓபனில் 6, அமெரிக்க ஓபனில் 5  மற்றும் பிரெஞ்ச் ஒபனில் ஒரு முறை சாம்பியன் ஆகியுள்ளார்.இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், 2020 ஆஸி. ஓபனில் அரையிறுதி வரை முன்னேறினார். அப்போது ஏ ற்பட்ட முழங்கால் காயத்திற்காக அறுவைசிகிச்சை செய்துக் கொண்டார். அதன் பிறகு 2020  மார்ச்சில் கத்தார் ஓபன் காலிறுதியில் விளையாடினார். அந்த போட்டியில் நிகோலஸ் பசிலாஷ்விலி (ஜார்ஜியா) 3-6, 6-1, 7-5 என்ற செட்களில் பெடரரை வீழ்த்தினார். அதன் பிறகு அறுவைசிகிச்சைகள், தொடர் ஓய்வு, கொரோனா பரவல் காரணமாக பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன், ஆஸி ஓபன் என கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மட்டுமின்றி, துபாய், இந்தியன்வெல்ஸ், மயாமி என முதல் தர சர்வதேச  போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. மீண்டும் போட்டிகளில் பங்கேற்கப் போவதாக கடந்த ஜூலையில் அறிவித்தார். அதற்காக துபாயில் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும் எந்தப்போட்டியிலும் பங்கேற்கவில்லை.இப்படி ஓராண்டாக எந்தப் போட்டியிலும் பங்கேற்காததால், உலக தர வரிசையில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த பெடரர் இப்போது 8 இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடக்கும் ஜெனீவா ஓபன் டென்னிஸ்  போட்டியின் 2வது சுற்றில் நேற்று நேரடியாகக் களமிறங்கிய அவர் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாப்லோ அந்துஜாரிடம் போராடி தோற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 51 நிமிடத்துக்கு நீடித்தது.

மூலக்கதை