கேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை

தினகரன்  தினகரன்
கேரளாவில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் சைலஜாவுக்கு இடமில்லை

திருவனந்தபுரம்: கேரளாவில்  கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி  மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க  வைத்தது. இந்நிலையில் புதிய  அமைச்சரவை நாளை (20ம் தேதி)  பதவியேற்க உள்ளது. திருவனந்தபுரம் தலைமை செயலகம் அருகே உள்ள மத்திய  ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழாவில் கேரள கவர்னர் ஆரிப்  முகமது கான், முதல்வர் பினராய்  விஜயன் உள்பட அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கிடையே 21 அமைச்சர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. பினராய் விஜயன் சட்டமன்றக் கட்சித் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள வரலாற்றில்  முதன் முறையாக 3 பெண்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு  அளிக்கப்பட்டுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 12 பேரில் முதல்வர் பினராய் விஜயன்  தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோல  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள 4 அமைச்சர்களும் புதுமுகங்கள் ஆவர்.  முதல்வர்  பினராய் விஜயனின் மருமகனான முகமது ரியாசுக்கு அமைச்சர் பதவி  வழங்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை  அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்ட சைலஜாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி  வழங்காததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மூலக்கதை