இல்லை... இல்லை... இல்லை...

தினகரன்  தினகரன்
இல்லை... இல்லை... இல்லை...

காட்டாற்று வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள், மிதந்து வரும் ஒரு கட்டை கிடைத்தால் கூட கரையேறி விடலாம் என்ற நம்பிக்கை கிடைத்து விடும். ஆனால், வெள்ளத்தை விட மிகப்பெரிய ஆழிப்பேரலையாக அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும்  கொரோனாவில் இருந்து மீள ஒரு துரும்பு கூட கிடைக்காத நிலையில் மக்கள் தத்தளித்து வருகின்றனர். அந்த அளவுக்கு படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பு மருந்து பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.  பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல மாநிலங்களில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளி விவரத்தின்படி, முதல் அலை பரவலுக்கும் 2வது அலை பரவல் துவக்கத்துக்கும் இடையே படுக்கை வசதிகள் குறைந்துள்ளதை காண முடிகிறது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம்  தேதிப்படி இந்தியாவில் ஆக்சிஜனுடன் 2,47,972 படுக்கைகள் இருந்தன. கடந்த ஜனவரி 28ம் தேதி நிலவரப்படி இது 1,57,344 ஆக குறைந்து விட்டது. அதாவது, ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கை 36.54 சதவீதம் சரிந்து விட்டது இதே காலக்கட்டத்தில், கொரோனா நோயாளிகளுக்கான ஐசியு படுக்கைகள் எண்ணிக்கையும் ஏறக்குறைய பாதியாக குறைந்து விட்டது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி கொரோனா நோயாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஐசியு  படுக்கைகள் எண்ணிக்கை 66,638 ஆக இருந்தது, ஜனவரி 28ம் தேதி வெறும் 36,008 ஆகி விட்டது. அதாவது 46 சதவீதம் சரிந்து விட்டது. இவை இரண்டையும் சேர்த்து கணக்கிடும்போது சுமார் 4 மாதங்களிலேயே ஆக்சிஜன் இணைப்புடன்  கூடிய ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை 38 சதவீதம் சரிந்துள்ளது. இதுபோல், வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கை, கடந்த செப்டம்பர் 22ம் தேதி 33,024 ஆக இருந்தது, ஜனவரி 28ம் தேதி  23,618 ஆக குறைந்து விட்டது. ஆனால், முதல் அலை பரவலின்போது ஐசியு மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறைவாக இருந்ததும், பின்னர் அதிகரிக்கப்பட்டதும் நாடாளுமன்ற புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, முதல் அலை பரவலின்போது கடந்  ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி 62,458 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருந்தன. இது கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி நிலவரப்படி 2,47,972 ஆக உயர்ந்தது. இதே காலக்கட்டத்தில் ஐசியு படுக்கைகள் எண்ணிக்கை  27,360 ல் இருந்து 66,638  ஆகவும், வென்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகள் 13,158 ல் இருந்து 33,024 ஆகவும் உயர்ந்தது. அதாவது, ஏப்ரல் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 22ம் தேதி இடையே ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கை 297 சதவீதமும், ஐசியு படுக்கைகள்  எண்ணிக்க 143 சதவீதமும், வென்டிலேட்டர் வசதி 151 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆனால், அதற்கு அடுத்த 4 மாதங்களில் இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டதை நாடாளுமன்ற புள்ளி விவரமே சுட்டிக் காட்டுகிறது.முதல் அலை பரவலின் உச்சம் மற்றும் 2வது அலை பரவல் தொடக்கத்துக்கு இடையே தெலங்கானா, திரிபுரா, அருணாசல பிரதேசம், லடாக், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் படுக்கை  வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தெலங்கானா, திரிபுரா மாநிலங்களில்  100 சதவீதம் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களில் இந்த உயர்வு ஒரு சதவீதம் முதல் 92 சதவீதமாக உள்ளது. மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சண்டிகார், தாத்ரா நகர்  ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளில் பெரிய மாற்றமில்லை. ஆனால், பெரிய மாநிலங்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகின. தற்போதும் கூட  மேற்கண்ட வசதிகள் பல மாநிலங்களில் போதுமானதாக இல்லை. வெளிப்படையான புள்ளி விவரங்களை மத்திய அரசு அவ்வப்போது வெளியிடாமல் இருந்தாலும் கூட, பொதுமக்கள் படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடுவதில் இருந்தே  இதை கண்கூடாக காண முடிகிறது என பெரும்பாலானவர்கள் தெரிவிக்கின்றனர். தடுப்பூசி போட்டால் மட்டுமே கொரோனா பரவல் விரைவில் கட்டுப்படும் என இருந்தாலும், அதற்கும் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசியை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்கு விநியோகித்தும் பலர் 2வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கே அல்லாடி வருகின்றனர். ஆனால், மேற்கண்ட குறைகளை  போக்கி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசையே பெரும்பாலான மாநிலங்கள் நாடுகின்றன. ஆனால், ஆக்சிஜன் சிலிண்டர், மாத்திரை, தடுப்பூசி ஆகியவற்றை பொறுத்தவரை மத்திய அரசின் உதவி மாநிலங்களின் தேவையை  ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயானங்களில் இடம் கிடைக்காத அவலம் நீடிக்கிறது.   மேற்கண்ட அவல நிலைகள் காரணமாக, நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எதிர்மறை பதில்களைத் தான் எதிர்நோக்கியபடி இருக்கின்றனர். எங்கும் இல்லை..இல்லை என்கிற குரல்களே ஒலிக்கின்றன. கொரோனா எனும் கொடிய  நோய் வராமல் தடுத்துக்கொள்ள தடுப்பூசி போட சென்றால் தடுப்பூசி இல்லை. சரி மருந்தை வாங்கி நோயை கட்டுப்படுத்துவோம் என்றால் மருந்து இல்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றால் அங்கு படுக்கைகள்  இல்லை. அப்படியே படுக்கை கிடைத்தாலும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை. எதுவும் இல்லாமல் கடைசியில் உயிர் துறந்தாலும் ‘இல்லை’யின் குரல் ஒலிப்பது நிற்கவில்லை. இறந்த சடலத்தை புதைக்கவோ, எரிக்கவோ மயானங்கள் இல்லை.  இல்லை.. இல்லை என்பதே இன்று இந்தியாவின் கொரோனா கள நிலவரமாக உள்ளது.

மூலக்கதை