கொடூர கொரோனாவால் நேர்ந்த சோகம்: ஒன்றாய் பிறந்த இரட்டையரை ஒன்றாய் தழுவியது மரணம்: ஒரே நாளில் 2 மகன்களையும் பறிகொடுத்த தாய் கதறல்

தினகரன்  தினகரன்
கொடூர கொரோனாவால் நேர்ந்த சோகம்: ஒன்றாய் பிறந்த இரட்டையரை ஒன்றாய் தழுவியது மரணம்: ஒரே நாளில் 2 மகன்களையும் பறிகொடுத்த தாய் கதறல்

மீரட்: பல குடும்பங்களையும் மீளாத துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ், ஒன்றாய் பிறந்த இரட்டையர்களின் உயிரை ஒரே நாளில் பறித்து கொடூர பாவத்தை செய்துள்ளது. 24 வயதான இரு மகன்கைளயும் ஒரே நாளில் பறி  கொடுத்த தாய் கண்ணீர் விட்டு கதறுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த தம்பதியர் ரேமண்ட் ரபேல், சோஜா. இவர்களது மகன்கள் ஜோபிரட், ரால்பிரட். 24 வயதாகும் இவர்கள் இருவரும் இரட்டையர்கள். 3 நிமிட வித்தியாசத்தில் அடுத்தடுத்து பிறந்தவர்கள். ஒரே மாதிரியான  உடை, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி என வாழ்க்கையில் ஒன்றாய் வாழ்ந்தனர். பி.டெக் கம்ப்யூடர் இன்ஜியரிங் படித்த இருவருக்கும் கல்லூரி இறுதியாண்டில் வேலையும் கிடைத்தது. இருவரும் ஐதராபாத்தில் முன்னணி நிறுவனங்களில்  வேலைக்கு சேர்ந்தனர். ஜோபிரட், ரால்பிரட் இருவரும் பெற்றோரிடம் மிகுந்த பாசமாக இருந்துள்ளனர்.தற்போது கொரோனா பரவலைத் தொடர்ந்து, இருவருமே சொந்த ஊருக்கு வந்து வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்து வந்தனர். கூடவே, பெற்றோருக்கும் உதவியாக இருந்து வந்தனர். மிகவும் சந்தோஷமாக சென்ற இவர்கள்  வாழ்க்கையை கொரோனா சூன்யமாக்கி விட்டது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி இரட்டையர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வயதான பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தனர். கடந்த 10ம் தேதி  இரட்டையர்கள் இருவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது. இதனால் மகன்கள் இருவரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோர் இருந்தனர். ஆனால், கடந்த 13ம் தேதி ஜோபிரட் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி தகவல் பெற்றோரின் தலையில் இடியாக விழுந்தது. இந்த துயர தகவலை கேள்விப்பட்ட தாய் சோஜா, துக்கம் தாங்காமல் மகன் ரால்பிரட்டுக்கு  செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ரால்பிரட்டிடம் இப்போதைக்கு எதுவும் கூற வேண்டாம் என பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனாலும்கூட, ஏதோ ஒரு விபரீதம் நடந்திருப்பதை ரால்பிரட் உணர்ந்துள்ளார். இதனால் தனது தாயிடம், ‘‘அம்மா, ஏதோ நடந்திருக்கு, சொல்லுங்க மறைக்காதீங்க’’ என கூறி உள்ளார். அடுத்த சில மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு குறைந்து ரால்பிரட்டின் உயிரும் பிரிந்தது. ஒரே நாளில் 2 மகன்களையும் இழந்த தாய் சோஜா கண்ணீர் விட்டு கதறினார். தந்தை ரபேல் கூறுகையில், ‘‘கொரோனா என் இரு மகன்களையும் பறித்துக் கொண்டது. பிறந்ததில் இருந்தே இணை பிரியாமல் இருந்த அவர்கள் சாவில் கூட  பிரியவில்லை. மரணத்தால் கூட அவர்களை பிரிக்க முடியவில்லை. எப்படியும் அவர்கள் தேறி வருவார்கள் என நம்பிய நாங்கள் உடைந்து போயுள்ளோம். என் நம்பிக்கை தகர்ந்து விட்டது. அவர்கள் மரணிக்க வேண்டியவர்கள் அல்ல. என்  மகன்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்’’ என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.* கோவை கல்லூரியில் படித்தவர்கள் ஜோபிரட், ரால்பிரட் இருவரும் கோவை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.*  கடந்த 1997 ஏப்ரல் 23ம் தேதி இரட்டையர்கள் இருவரும் பிறந்துள்ளனர். ‘ஏம்மா பொய் சொல்றீங்க’தந்தை ரபேல் கூறுகையில், ‘‘கடைசியாக ரால்பிரட் மருத்துமவனையில் இருந்தபடி தனது தாயிடம் பேசியபோது, ஜோபிரட் பற்றி விசாரித்தான். அவனை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றி விட்டோம் என கூறினோம். அதற்கு அவன் ‘ஏம்மா  பொய் சொல்றீங்க’ என உடைந்து போன குரலில் பேசி போனை வைத்து விட்டான். அப்போதே அவனது உள்ளுணர்வுக்கு தெரிந்திருக்கிறது’’ என்றார்.

மூலக்கதை