தமிழகம் முழுதும் 'இ - பதிவு' திட்டத்தில் குளறுபடி!

தினமலர்  தினமலர்
தமிழகம் முழுதும் இ  பதிவு திட்டத்தில் குளறுபடி!

தமிழகம் முழுதும், 'இ- - பதிவு' திட்டத்தில், கடும் குளறுபடி நிலவுகிறது. ஒரு போலீஸ் எல்லையிலிருந்து, மற்றொரு போலீஸ் எல்லைக்குள் நுழைய, இ - பதிவு சான்று வேண்டும் என, சென்னை போலீசார் போட்டிருக்கும் நுாதன உத்தரவு, மாநகரவாசிகளை கோபமடையச் செய்துள்ளது.

அதாவது, திருவல்லிக்கேணியிலிருந்து ராயப்பேட்டை செல்வதானாலும்; ராயப்பேட்டையிலிருந்து அடையாறோ, பெசன்ட் நகரோ செல்வதானாலும், இ - பதிவு சான்று கேட்டு போலீசார் கடுப்படிக்கின்றனர். முழு ஊரடங்கு எனச் சொல்லி, கடைகளை காலை, 10:00 மணி வரை திறக்கவும், ரேஷனில் கூட்டம் சேர்க்கவும், திருமண வைபவங்களுக்கும் அனுமதி அளித்துள்ள அரசு, அத்தியாவசிய பணிகளுக்காகவோ, மருத்துவத்துக்காகவோ, நகருக்குள் சுற்றுபவர்களை மடக்குவது, எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு, மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க,ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்,தளர்வில்லாத முழு ஊரடங்கு;மற்ற நாட்களில், தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை, அரசு அறிவித்துள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை, மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று எண்ணி, மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

மக்கள் அதிக அளவில் வெளியில் செல்வதைத் தடுக்க, மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் செய்ய, நேற்று முன்தினம் முதல், இ- - பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாததால், இ- - பதிவு பெரும் குளறுபடியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்காக, 'இ - பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது விண்ணப்பித்தவர்கள், செல்ல வேண்டிய இடத்திற்கான முகவரியுடன், அதற்கான ஆவணங்களை, அதற்குரிய இணையதளத்தில், 'அப்லோடு' செய்ய வேண்டும்.அவற்றை, அந்தந்த மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கு ஒப்புதல் அளித்தனர். இதனால், தேவையின்றி மக்கள் வெளியில் செல்வது தடுக்கப்பட்டது. ஆனால், இறப்புகளுக்கு செல்வோர், இ- - பாஸ் பெற தாமதம் ஏற்பட்டது.

தற்போது, இ - பாஸ் முறைக்கு பதிலாக, இ - பதிவு முறையை, தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இதன்படி, 'வெளியில் செல்ல விரும்புவோர், இ - பதிவுக்கு, eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அந்த சான்றை எடுத்துச் சென்றால் போதும்' என, சொல்லப்பட்டிருந்தது.ஆனால் திடீரென, உள்ளூரில் பயணிப்போரிடமே, போலீசார் நேற்று, இ - பதிவு சான்று கேட்டு துன்புறுத்தினர். மருத்துவமனைக்கு செல்வோர், பத்திரிகை அலுவலகங்களுக்கு செல்வோர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்த செல்வோர், நோயாளிகளுக்கு உணவு எடுத்து செல்வோர் உட்பட அனைவரையும் நிறுத்தி வைத்து, இ - பதிவு சான்று கேட்டு தொல்லை செய்ததால், சென்னை நகரம் ஸ்தம்பித்தது.

இதற்கு காரணம், சென்னை மாநகர போலீசார், நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பு தான்.
அதாவது, நேற்று முதல், ஒரு போலீஸ் எல்லைக்குள் இருந்து மற்றொரு போலீஸ் எல்லைக்குள் செல்ல, இ -- பதிவு அவசியம் என அறிவித்துள்ளனர். திருவல்லிக்கேணியிலிருந்து பணி நிமித்தமாக ராயப்பேட்டை சென்றாலும், இ - பதிவு தேவை என்ற நிலை உருவாகி உள்ளது. ராயப்பேட்டையிலிருந்து அடையாறோ, பெசன்ட் நகரோ செல்வதற்கும், இ - பதிவு தேவை என்கின்றனர்.

ஏன் இந்த குழப்பம்?



இதனால், சென்னையின் முக்கிய சாலைகளில், நேற்று எண்ணிலடங்காவாகனங்கள் வரிசைகட்டி நின்றன.மேலும், மாவட்டங்களுக்குள், இரு சக்கர வாகனம், கார் போன்றவற்றில் பயணிப்பதற்கான, இ - பதிவுக்கு விண்ணப்பிக்க, மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பை சார்ந்த காரியங்கள் இடம் பெற்றுள்ளன; திருமணம் இடம் பெறவில்லை.
உள்ளூரில் தான் இந்த நிலை என்றால், வெளியூர் செல்பவர்களுக்கு வேறு பிரச்னை. ஊர் செல்வதற்கான காரணத்தை தெரிவிப்பதுடன், அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், என்ன ஆவணங்கள் வேண்டும் என்ற விபரமும் இடம் பெறவில்லை.
இந்த குழப்பம் காரணமாக, நேற்று ஏராளமானோர் இ- - பதிவு செய்யாமல், வாகனங்களில் சென்றனர்.

அவர்களை போலீசார் ஆங்காங்கே மடக்கவே, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் காரணமாக, பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கனவே, இ -- பாஸ் வழங்கிய அனுபவம் உள்ள அதிகாரிகள், அதன் நடைமுறைகளை முதல்வரிடம் கூறினரா என்பது தெரியவில்லை.வெளியூர் செல்ல ரயில்கள் இயக்கப்படுகின்றன. எவ்வித காரணமும் இல்லாமல், அதில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயிலில் செல்வோர், இ- - பதிவு பெற வேண்டும் என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.ஆனால், சாலையில் நிற்கும் போலீசார், இ -- பதிவு ஆவணம் கேட்கின்றனர். இது, நுாலை விட்டு வாலை பிடிக்கிற கதையாக உள்ளது.

யாருக்கெல்லாம் தேவை?



ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு விதமான அறிவிப்புகள் வெளியிடப்படுவது, குழப்பங்களை அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க, அரசு முறையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

* மாவட்டத்திற்குள்ளோ, மாவட்டங்களுக்கு வெளியிலோ செல்ல, யாருக்கெல்லாம் இ -- பதிவு தேவை; யாருக்கு தேவை இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும்

* திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு யாரெல்லாம் செல்லலாம்; இ- - பதிவுக்கு விண்ணப்பிக்க, ஒவ்வொரு காரணத்திற்கும் என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெளிவுபடுத்த வேண்டும்.

* தற்போது தினசரி காலை, 10:00 மணி வரை, மளிகை, காய்கறி, பழக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்திற்குள் பொருட்கள் வாங்க வேண்டும் என, கடைகளில் மக்கள் குவிகின்றனர். இவற்றால், வியாபாரிகளுக்கும் சிரமமாக உள்ளது.

* காய்கறி கடைகளுக்கு அனுமதி மறுத்து விட்டு, தள்ளுவண்டி வியாபாரிகளை அனுமதிக்கலாம். இது கூட்டத்தை தவிர்க்க உதவும் அல்லது அரசே நடமாடும் காய்கறி வாகனங்களில், காய்கறி விற்க ஏற்பாடு செய்யலாம்
.

* ரயிலில் பயணிப்போருக்கு, இ- - பதிவு தேவையா, இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

* ரேஷன் கடையில்,2,000 ரூபாய் வாங்க, ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதைத் தவிர்க்க, அவரவர் வங்கிக் கணக்கில், பணத்தை செலுத்தி விடலாம்.

* கடந்த ஆட்சியில், முழு ஊரடங்கு என்று சொல்லி கடைகளை மூடினர்; இதை வியாபாரிகள் எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பால், கடைகளை திறந்தனர். இதனால், தொற்றின் வேகம் அதிகரித்தது. பின், காய்கறிகளை தள்ளுவண்டியில் விற்கத் துவங்கினர். பின், அனைத்தும் கட்டுக்குள் வந்தது.
தற்போது, ஊரடங்கு பெயரளவிற்கே உள்ளது. போலீசாருக்கும், பொதுமக்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. எனவே, அரசு உறுதியான முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான், கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

திருமணத்திற்கு செல்ல 'இ - பதிவு' பெறலாம்!



திருமண நிகழ்வுகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ - பதிவு அவசியம். அதற்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், 'திருணம் தொடர்பான நிகழ்வுகளுக்கு செல்ல, பதிவு செய்வதற்கான வசதியை, இன்று முதல் இணையதளத்தில் பெறலாம்; அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

வியாபாரிகளே அறிக்கை விட்டனரே!





கொரோனாவில், சொந்த பந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினர் சிலர் கூறியதாவது:

'கொரோனாவை கட்டுப்படுத்த, எங்களால் ஆன முழு ஒத்துழைப்பை வழங்குகிறோம்' என, இந்த ஆட்சி பொறுப்பேற்க இருந்த நேரத்திலேயே, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார்.

இது தவிர, 'புது அரசு பொறுப்பேற்றதும், முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருக்கிறது' என, பொதுமக்களுமே அனுமானித்திருந்தனர். அதற்கேற்றவாறு, திருமணம் உட்பட சுப நிகழ்ச்சிகளை, குறைந்த நபர்களுடன் நடத்த திட்டமிட துவங்கி இருந்தனர்.

ஏற்கனவே, பிரசாரம் உட்பட பல கூட்டங்களை நிகழ்த்தி, அதன் வாயிலாக தொற்று பரவக் காரணமாக இருந்த கட்சியினரும், இந்த சமயத்தில், முழு ஊரடங்கை பெரிய அளவில் எதிர்த்திருக்க மாட்டார்கள். எதார்த்தம் புரிந்து, மக்களும் ஒத்துழைத்திருப்பர். எங்களை போல, உறவினர்களை இழந்து வாடும் நிலை, மக்களுக்கு ஏற்பட்டிருக்காது.

ஆனால், அரசு இம்முறை, தினசரி ஊதியம் பார்க்கும் நபர்களுக்காக, ஊரடங்கை தளர்வுடன் அறிவித்து விட்டது. மாற்று ஏற்பாடு கைவசம் இருக்க, இன்னும் சமயோசிதமாக சிந்தித்து அரசு முடிவெடுத்திருந்தால், இழப்புகளையும், குளறுபடிகளையும் தவிர்த்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர்-

மூலக்கதை