மனுக்களுக்கு தீர்வு காணும் பணி துவக்கம்

தினமலர்  தினமலர்
மனுக்களுக்கு தீர்வு காணும் பணி துவக்கம்

சென்னை:'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை சார்பில், குறை தீர்ப்பு பணிகள் துவங்கின. முதல் கட்டமாக, 549 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று, தலைமை செயலகத்தில், 10 மனுதாரர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி வழியே, மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றின் மீது, 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற புதிய துறையை, முதல்வர் ஸ்டாலின் உருவாக்கினார். பின், அதற்கு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். அவரிடம் இம்மாதம், 9ம் தேதி அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 72 மரப்பெட்டிகள் மற்றும், 275 அட்டை பெட்டிகளில், நான்கு லட்சம் மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.ஒவ்வொரு மனுவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதும், தனித்தன்மையுடன் கூடிய, அடையாள எண் வழங்கப்பட்டு, அந்த எண்ணுடன் கூடிய, எஸ்.எம்.எஸ்., மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.
ஒவ்வொரு மனுவிலும் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள், அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு, கள ஆய்வு செய்யப்பட்டு, உடனடி தீர்வு காண, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.இதுவரை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருவாரூர், தேனி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட, 549 மனுக்கள் மீது, முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவி



இந்த திட்டம் செயல்படத் துவங்கியதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை, தலைமை செயலகம் வரவழைத்து, முதல்வர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

* சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராணிக்கு, முதியோர் உதவித்தொகை; தி.நகரை சேர்ந்த சத்தியநாராயணனுக்கு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை; சூளைமேடை சேர்ந்த தாயாரம்மாவுக்கு, முதிர் கன்னி உதவித்தொகை; தண்டையார்பேட்டையை சேர்ந்த சுமதிக்கு, தையல் இயந்திரம்; வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமாருக்கு, வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது.

* ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த நந்தினிக்கு, காது கேட்கும் கருவி; ராணிப்பேட்டை மாவட்டம், கொண்டபாளையத்தை சேர்ந்த ஜெயந்திக்கு, இலவச வீட்டுமனை பட்டா; வெங்குபட்டு ஊராட்சியை சேர்ந்த சுபாசுக்கு, சொட்டு நீர் பாசன உதவி போன்ற நலத்திட்டங்களை, முதல்வர் வழங்கினார்.

பணி ஆணைகள்



சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டிய, பொதுவான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக, பொது கோரிக்கைகள் தொடர்பாக வரப்பெற்ற, நான்கு மனுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் ஆணையை முதல்வர் வழங்கினார்.

* திருவள்ளூர் மாவட்டம், முனுசாமி கோரிக்கை அடிப்படையில், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், 10.1 லட்சம் ரூபாய் செலவில், அங்கன்வாடி மையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* முருகன் என்பவர் கோரிக்கையை ஏற்று, ஆமூர் ஊராட்சி, சித்தேரி கால்வாயில், 4.6 லட்சம் ரூபாய் செலவில், தடுப்பணை கட்ட அனுமதி ஆணை அளிக்கப்பட்டது.

* ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த, குணசேகரனின் கோரிக்கை அடிப்படையில், அசநெல்லிகுப்பம் கிராமத்தில், 1.89 லட்சம் ரூபாயில், சிமெண்ட் சாலை.


* கல்மேல்குப்பம் ஊராட்சியை சேர்ந்த புவனேஸ்குமார் கோரிக்கை அடிப்படையில், எருக்கம்தொட்டி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில், 1.1 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் குழாய் அமைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோல, இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும், முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என, துறை அலுவலர்களுக்கு, முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் இறையன்பு, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மூலக்கதை