கிராமங்களில் தொற்றை தடுக்க பிரதமர் மோடி ஆலோசனை

தினமலர்  தினமலர்
கிராமங்களில் தொற்றை தடுக்க பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி :''உள்ளூர் கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவிப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பது, முழுமையான, துல்லியமான தகவல்களை பகிர்வது மட்டுமே கிராமப்புறங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பெரு நகரங்களில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் பரவி வந்த கொரோனா தொற்று பரவல், தற்போது கிராமங்கள், சிறு நகரங்களிலும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இதையடுத்து, ஒன்பது மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் பிரதமர் கூறியதாவது:
கொரோனாவுக்கு எதிரான போரில், மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள், கமாண்டர்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்குத்தான் கள நிலவரத்தின் நிஜம் தெரியும்.தொற்று தடுப்பு பணியில், உள்ளூர் நிலவரத்தின் தேவைக்கு ஏற்ப, அதிகாரிகள் மாற்றங்களை செய்யலாம். தடுப்பூசி வினியோகத்தை அதிகரிக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் பணியில் அடுத்த, 15 நாட்களுக்கான கால அட்டவணையை, மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 'பி.எம்., கேர்ஸ்' நிதி வாயிலாக, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் உற்பத்தி வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உள்ளூர் கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவிப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பது, முழுமையான, துல்லியமான தகவல்களை பகிர்வது மட்டுமே கிராமப்புறங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் கூறினார்.


மூலக்கதை