பெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது

தினமலர்  தினமலர்
பெண் பத்திரிகையாளர் வங்கதேசத்தில் கைது

டாக்கா:வங்கதேசத்தில் புலனாய்வு செய்திகளை வெளியிடும் பெண் பத்திரிகையாளரை, ரகசிய காப்பு சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அதிகம்விற்பனையாகும் நாளிதழான, 'புரோதம் அலோ'வில், புலனாய்வு பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர் ரோஜினா இஸ்லாம்.இவர், கொரோனா தொடர்பாக கொள்முதல் செய்யப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இவர், சுகாதார துறை அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற போது, சில ஆவணங்களை படமெடுத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, அவரை சுகாதாரத் துறை அதிகாரிகள், ஐந்து மணி நேரம் விசாரித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.காலனி ஆதிக்கத்தில் புழக்கத்தில் இருந்த, அரசு ரகசிய காப்பு சட்டத்தின் கீழ், ரோஜினா இஸ்லாமை கைது செய்தனர்.

இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அதற்கு நீதிபதி அனுமதி மறுத்து, நான்கு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, ரோஜினா இஸ்லாம் கைது செய்யப்பட்டதற்கு, பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவரை விடுதலை செய்யக் கோரி, சுகாதார அமைச்சர் ஜாகித் மலேகுவின் கூட்டத்தை, பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.

மூலக்கதை