இஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்

தினமலர்  தினமலர்
இஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம்

வாஷிங்டன்:''ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருேசலத்தில் உள்ள, ஒரு வழிபாட்டு தலம் தொடர்பாக சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த சண்டைக்கு உலக நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: இஸ்ரேலின் அப்பாவி மக்கள் மீது, ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும், 3,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பயங்கரவாதிகள் ஏவியுள்ளனர்.

இந்நிலையில், தன் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் முழு உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. அதற்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவிக்கிறது.ஜெருசலத்தில் மத வன்முறை ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் பாராட்டுகிறோம். காசாவில் உள்ள ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். இது தொடர்பாக எகிப்து உள்பட நட்பு நாடுகளுடன் அெமரிக்கா பேசி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளின்கென், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனனாசியை தொடர்பு கொண்டு, நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடரும் தாக்குதல்!

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான சண்டை, இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.நேற்று முன்தினம் இரவும், காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், இஸ்லாமிக் பல்கலையின் ஆறு மாடிக் கட்டடம் தரைமட்டமானது.

கடந்த, 10ம் தேதி துவங்கிய இந்த தாக்குதலில், இதுவரை, காசா பகுதியில், 61 குழந்தைகள், 36 பெண்கள் உட்பட, 212 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலமுக்கியமான சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.இஸ்ரேலில் 5 வயது சிறுவன், ஒரு ராணுவ வீரர் உட்பட, 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஜெருேசலத்தில், கடந்த வாரம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பாலஸ்தீன தலைவர்கள் ஆதரவு உள்ளதால், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை