கோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்

தினமலர்  தினமலர்
கோவாக்ஸ் திட்டத்துக்கு உதவத் தயார்: ஜோ பைடன்

வாஷிங்டன் டிசி: வரும் ஜூன் மாதம் பிரிட்டன் தலைமையேற்று நடத்தும் ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றவுள்ளார். சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்து சென்று சேர உருவாக்கப்பட்ட கோவாக்ஸ் திட்டம் மூலமாக பல ஏழை நாடுகள் பயனடைகின்றன. இதுகுறித்து ஜி7 மாநாட்டில் ஜோ பைடன் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.


உலகெங்கிலும் உள்ள ஜனநாயக கொள்கையை பின்பற்றும் நாடுகளுடன் இணைந்து இந்த திட்டத்தில் அமெரிக்கா ஈடுபடும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோவாக்ஸ் திட்டத்திற்கு அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து ஜி7 மாநாட்டில் அவர் அறிக்கை வெளியிட உள்ளார்.
உலக சுகாதார அமைப்பு பொதுநலன் கருதி இந்தத் திட்டத்தை உருவாக்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இணைந்துள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது.


சிறிய நாடுகள் பயன்பெறும்அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் இந்த திட்டத்தில் தடுப்பு மருந்துகளை தயாரித்து இலவசமாக வழங்க சம்மதித்தன. தற்போது உலக அளவில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் சிறிய நாடுகள் பல பயன்பெறும். உலக சுகாதார அமைப்புடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா 8 கோடி டோஸ் தடுப்பு மருந்தை கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் ஏழை நாடுகளுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல தடுப்பு மருந்து நிறுவனங்களான பைசர், மடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வரும் ஜூன் மாதத்திற்குள் 2 கோடி டோஸ் தடுப்பு மருந்தை தயாரித்து கோவாக்ஸ் திட்டத்திற்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூலக்கதை