இந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி

தினமலர்  தினமலர்
இந்திய வகை வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் தீவிர முயற்சி

லண்டன்: பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.

தற்போது பிரிட்டனில் உருமாறியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால் போரிஸ் ஜான்சன் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை சிறிதளவு தளர்த்தியுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை சமாளிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த தடுப்பு மருந்தை உருவாக்க பிரிட்டன் விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்த தகவலை அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் மேக் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

இந்திய வகை உருமாறிய வைரஸ் பிரிட்டனுக்குள் வராமல் தடுக்க தற்போது விமான நிலையங்களில் தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த வாரம் 520 பிரிட்டன் குடிமக்கள் இந்திய வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வாரம் 1,313 பேர் இந்திய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய வகை வைரஸ் தற்போது பிரிட்டனில் அதிகமாகப் பரவி வருவது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இந்திய வகை வைரஸை கட்டுப்படுத்த இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப் படுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பு மருந்து விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக தங்களது குடிமக்களை இந்திய வகை வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள பிரிட்டன் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை