அழகிப் போட்டியில் மியான்மர் அழகியின் உருக்கமான கோரிக்கை..!

தினமலர்  தினமலர்
அழகிப் போட்டியில் மியான்மர் அழகியின் உருக்கமான கோரிக்கை..!

ஹாலிவுட்: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதிமுதல் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது. மியான்மர் ராணுவம் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது அத்துமீறி வன்முறை தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டரை மாதங்களாக இந்த ராணுவ சர்வாதிகாரம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு மியான்மர் நாட்டு இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பல நாட்டு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் மியான்மர் ராணுவத்தின் இந்த மனித உரிமை மீறலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் ராணுவத்தின் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர். ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாத அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றனர். இதனை அடுத்து ராணுவத்துக்கு எதிராக புரட்சிகர படைகள் உருவாகத் தொடங்கியுள்ளன. மியான்மர் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகர்கள், உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் தற்போது சர்வதேச அரங்குகளில் ராணுவத்தின் அராஜகம் குறித்து குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.


இதனையடுத்து தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹாலிவுட் நகரில் உள்ள ஓர் ஆடம்பர விடுதிகள் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மியான்மர் நாட்டு பெண் போட்டியாளர் துஷார் மின்ட் லோகின் ராணுவ வன்முறை குறித்து குரல் எழுப்பியுள்ளார். தங்களது தலைவி ஆங் சான் சூ காய் வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதிலிருந்து தங்களது மக்களை காக்கவேண்டும் என்று அவர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் ‛பிரே ஃபார் மியான்மர்' என்கிற பதாகையை ஏந்திக்கொண்டு அவர் ரேம்ப் வாக் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை