ஆசிய- அமெரிக்க ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளும் கமலா ஹாரிஸ்

தினமலர்  தினமலர்
ஆசிய அமெரிக்க ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளும் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய அமெரிக்கா ஜனநாயக மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். வரும் புதன் அன்று நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் உரையாற்ற உள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை ஆசிய அமெரிக்க ஜனநாயக அரசியல் திட்ட கமிட்டி ஏற்று நடத்துகிறது.



ஆசிய,அமெரிக்க ஒற்றுமை



ஜப்பான், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து பணி செய்து நிரந்தர குடியுரிமை பெறும் ஆசிய குடிமக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆசிய அமெரிக்க ஜனநாயக மாநாட்டில் சிறப்புரையாற்ற தலைப்பு ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். தற்போது கமலா ஹாரிஸ் அமெரிக்க மற்றும் ஆசிய ஒற்றுமை குறித்து இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அதீத இனப்பற்று கொண்ட பூர்வகுடி அமெரிக்கர்கள் ஆசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேற வருபவர்கள்மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு அமெரிக்காவில் வசிக்கும் ஆசியர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த பட்டியலை ஆசிய அமெரிக்க ஜனநாயக அமைப்பு கணக்கிடுவது வழக்கம்.


6,603 தாக்குதல்கள்



இதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம்முதல் இந்த ஆண்டு மார்ச்மாதம் வரை அமெரிக்காவில் 6,603 தாக்குதல்கள் ஆசியர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இன வேற்றுமையை களைந்து அமெரிக்காவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வழிவகை செய்ய இந்த மாநாடு உதவும் என நம்பப்படுகிறது.

மூலக்கதை