இஸ்ரேல் - காஸா இடையே பதற்றத்தை தணிப்பது அவசியம்: இந்தியா

தினமலர்  தினமலர்
இஸ்ரேல்  காஸா இடையே பதற்றத்தை தணிப்பது அவசியம்: இந்தியா

புதுடில்லி: 'இஸ்ரேல் - காஸா மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக தணிப்பது அவசியம்' என, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.



இஸ்ரேல் - காஸா இடையிலான மோதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று (மே 16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:இஸ்ரேல் - காஸா இடையிலான மோதலில் இந்தியத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்த அனைவரின் மறைவுக்கும் இந்திய அரசு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக தணிப்பது அவசியம். தற்போதைய மோதல் உச்சநிலையை எட்டாமல் தவிர்க்க அதைச் செய்தாக வேண்டும்.

இருநாடுகளுக்கும் இடையே நேரடியாகவும் அர்த்தமுள்ள முறையிலும் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பது இருதரப்பினருக்கும் இடையிலான அவநம்பிக்கையை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தற்போது ஏற்பட்டுள்ளதை போன்ற மோதல் சம்பவங்களுக்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிக்கும்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பினர் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், 'இஸ்ரேல் - காஸா மோதலால் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மிகவும் தீவிரமானது. இந்த மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த அழைப்பின் மீது இருதரப்பினரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

மூலக்கதை