தென் ஆப்ரிக்காவில் கொரோனா 3வது அலை

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்காவில் கொரோனா 3வது அலை

காவ்டெங்: தென் ஆப்ரிக்காவின் பொருளாதார மையமாகத் திகழும் காவ்டெங் மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவி வருவதாக அந்நாட்டின் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் டேவிட் மக்குரா தெரிவித்துள்ளதாவது: தென் ஆப்ரிக்கா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை பரவவில்லை. என்றாலும் காவ்டெங் மாகாணத்தில் பரவத் துவங்கியுள்ளது. கடந்த வாரத்தில் செவ்வாய் முதல் வியாழன் வரையிலான மூன்று நாட்களில் அந்த மாகாணத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 600-ல் இருந்து 1,200-ஆக அதிகரித்துள்ளது. இரண்டு அல்லது நான்கு நாட்களில் தொற்றுப் பரவல் இருமடங்கு ஆவது அபாயகரமானது.

காவ்டெங் மாகாணத்தில் கடந்த பல வாரங்களில் முதல்முறையாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16.05 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 15.20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்திருந்தாலும் பொது முடக்கத்தை அமல் படுத்த முடியாது. பொது முடக்கத்தால் பொருளாதாரத்தை முடக்க முடியாது. எனவே, அது நடக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

'மருத்துவக் கட்டமைப்பில் பின்தங்கியுள்ள தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும். ஆனால் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி, பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருப்பது நாட்டை பெரும் சிக்கலில் தள்ளும்' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை