தடுப்பூசியை நன்கொடையாக அளிக்க உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

தினமலர்  தினமலர்
தடுப்பூசியை நன்கொடையாக அளிக்க உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

ஜெனீவா: “உலக நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக, 'கோவாக்ஸ்' திட்டத்திற்காக, தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவேண்டும்,” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கை, 33.53 லட்சத்தை தாண்டி உள்ளது.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன.ஜெனீவாவை தலைமை இடமாக வைத்து செயல்படும் உலக சுகாதார அமைப்பு, 'கோவாக்ஸ்' என்ற திட்டத்தின் வாயிலாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வினியோகித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசால் ஏராளமான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.முன்பை காட்டிலும் தற்போது, இந்த வைரசால் ஏற்பட்டுள்ள சூழல், மிகவும் மோசமாக உள்ளது. பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வாயிலாகவே இந்த தொற்றை நம்மால் ஒழிக்க முடியும்.சில நாடுகளில், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நாடுகள், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதற்கு பதிலாக, கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளில், மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கூட இல்லாமல் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள், நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே, அந்த நாடுகளுக்காக, தடுப்பூசிகளை நன்கொடை வழங்க முன்வரவேண்டும். இந்தியாவில், கொ ரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல், கவலை அளிக்கும் வகையில் உள்ளது.இந்தியாவைப் போல், நேபாளம், இலங்கை, வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை