இந்திய மகளிர் அணி இங்கிலாந்து டூர்: டெஸ்ட், ஒருநாள் அணியில் இடம் பிடித்தார் ஷபாலி வர்மா

தினகரன்  தினகரன்
இந்திய மகளிர் அணி இங்கிலாந்து டூர்: டெஸ்ட், ஒருநாள் அணியில் இடம் பிடித்தார் ஷபாலி வர்மா

புதுடெல்லி: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக அனுபவ வீராங்கனை மித்தாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  டி20 போட்டிகளில், இந்திய அணி ஹர்மான்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது. மூன்று வகை போட்டிகளுக்குமான இந்திய அணியில் மொத்தம் 21 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா (17 வயது) டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.  ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், டானியா பாட்டியா ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால் இடது கை ஸ்பின்னர் ராஜேஷ்வரி கெயிக்வாட் தேர்வு செய்யப்படவில்லை. புதுமுக வீராங்கனையாக ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பர்/பேட்டர் இந்திராணி ராய் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா  இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, பிரிஸ்டலில் ஜூன் 16ம் தேதி தொடங்குகிறது.  இதைத் தொடர்ந்து ஜூன் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டியும் (பிரிஸ்டல்), 2வது ஒருநாள் டான்டனில் ஜூன் 30ம் தேதியும் நடைபெறுகின்றன. 3வது மற்றும் கடைசி ஒருநாள் வொர்செஸ்டரில் ஜூலை 3ம் தேதி நடக்கிறது. டி20 போட்டிகள் நார்த்தாம்ப்டன் (ஜூலை 9), ஹோவ் (ஜூலை 11), செம்ஸ்போர்டு (ஜூலை 15) மைதானங்களில் நடக்க உள்ளன.   டெஸ்ட் & ஒருநாள் அணி: மித்தாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா, ஹர்மான்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூணம் ராவுத், பிரியா பூனியா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஷபாலி வர்மா, ஸ்நேஹ் ராணா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), இந்திராணி ராய் (விக்கெட் கீப்பர்), ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி, பூணம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ்.    டி20 அணி: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், ஸ்நேஹ் ராணா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), இந்திராணி ராய் (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி, பூணம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், சிம்ரன் பகதூர்.

மூலக்கதை