தெலுங்கானாவில் விநோத செயல்!: மரத்தில் கட்டில் கட்டி தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட கொரோனா பாதித்த இளைஞர்..!!

தினகரன்  தினகரன்
தெலுங்கானாவில் விநோத செயல்!: மரத்தில் கட்டில் கட்டி தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட கொரோனா பாதித்த இளைஞர்..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வீட்டில் வசதி இல்லாத காரணத்தால் மரத்தில் கட்டிலை கட்டி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா தொற்று உறுதியானவர் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். வீடுகளில் தனி அறை உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர். அதற்கான வசதி இல்லாதவர்கள் கொரோனா மையங்களிலேயே தனிமைப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் தெலுங்கானா மாநிலம் நல்குண்டா மாவட்டம் கொத்தன்குண்டா கிராமத்தை சேர்ந்த ஷிவா என்ற நபர், ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டில் குடும்பத்தினர் மூவருடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷிவாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்த ஷிவா, தன் வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தின் மீது கட்டிலை கட்டி தங்கிவிட முடிவு செய்துள்ளார். அவருக்கு தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை கயிறு மூலம் அவருக்கு கொடுத்துவிடுகின்றனர். இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெகுவாக பரவி வருகிறது. பலரும் அவருக்கு உதவ முன்வரும் நிலையில், மரத்தில் தனிமைப்படுத்திக் கொண்டதில் தனக்கு எவ்வித பயமும் இல்லை என்றும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் தைரியத்தை வளர்த்துக்கொண்டால் எந்த நோயையும் விரட்டி விடலாம் என நம்பிக்கை தெரிவித்தார். 

மூலக்கதை